Menu

நொடி – 27

முடிந்து விட்டது.

 

அனைத்தும் முடிந்து விட்டது.

 

இதயமே ஏன் இன்னும் துடித்துக் கொண்டு இருக்கின்றாய்? துடிப்பை ஏன் நிறுத்த மறுக்கிறாய்?

 

வேண்டாம் …. எதுவுமே வேண்டாம் செத்துப் போ….செத்துப் போ என்று மனமோ ஊமையாக கதறியது.

 

எந்த மனைவியும் காண சகியாத கணவனின் செயலில் அவளுக்கோ மொத்த உலகமும் ஸ்தம்பித்து விட்டதை போன்ற உணர்வு.

 

மேனியெல்லாம் சூடேறி, வியர்வை முத்துக்கள் முகமெங்கும் பூத்திருக்க இதயத்தில் சுள்ளென்ற வலி ஊடுருவி தலையை சுற்ற வைத்தது. 

 

நெற்றியை அழுத்தி பிடித்துக் கொண்டு நிலத்தில் கால்கள் வேரூன்ற நின்றவளின் கன்னத்தை ஊடறுத்து அருவி போல நிற்காது வழியும் கண்ணீரை துடைக்க கூட மனமின்றி இதற்கு மேலும் அங்கு நிற்கும் திராணியற்றவளாய் ஒருவித தள்ளாட்டத்துடன் திரும்பி நடந்தாள். 

 

தன்னவனுடன் ஓருயிர் ஈருடலாக கலக்கா விடினும் தன்னைக் காணும் நொடியெல்லாம் தன் ஸ்பரிசத்தை தீண்டி நுகர்ந்தவனுக்கு இன்னொரு பெண்ணை எப்படி தீண்ட முடிந்தது? 

 

அதீத மன அழுத்தத்துடன் இதழ் கடித்து தன் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றவள், பற்களால் இதழ்களில் கொடுத்த அழுத்தத்தில் இதழ்களிலிருந்து நில்லாமல் குருதி கசிய ஆரம்பித்த அதே நேரம் கருமணிகள் மேல்நோக்கி சொருக அப்படியே மயங்கி சரிந்தவளின் இடையை தாங்கிப் பிடித்திருந்தது ஒரு வலிய கரம்.

 

அந்த வலிய கரங்களுக்கு சொந்தக்காரனோ, அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். 

 

எப்படி இவள் இங்கே? என்று யோசிக்க கூட முடியவில்லை. அவளின் நிலை அவனை சிந்திக்க விடவில்லை.

 

அந்த இருள் சூழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் அனைவரும் ஆரவாரத்தோடு ஆடி பாடிய படி  மேடையில் கவனம் வைத்திருக்க, இங்கு  நடப்பவை யாருக்கும் தெரியாமல் போனது தான் துரதிஷ்டம்.

 

அவளது இதழ்களில் இருந்து கசிந்த குருதியும், குளிர்ந்து போன மேனியும் அவனுக்கு என்னவோ சரியில்லை என்றே உணர்த்திற்று.

 

“வேக் அப் யாழிசை… கண்ணை திற…” என்றவன் அவளின் கன்னங்களை தட்டி அவளின் சுய நினைவை மீட்க முயன்றான் ஆனால் பலன் என்னவோ பூச்சியம் தான்.

 

அவளது முகத்தில் தெரிந்த அந்த அதீத வலியின் சாயல், அவனை என்னவோ செய்தது.

 

இனி ஒரு நொடியும் அவளை இந்த நரகத்தில் விடக் கூடாது என்று முடிவெடுத்தவனாக, அவளை அப்படியே அள்ளித் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான் அந்த நெடியவன்.



********************

 

இதே சமயம், தன்னவளின் காதலை உயிரோடு மரிக்க செய்து விட்டு அவளை முற்றிலுமாக தவிர்த்தவனாய் தான் அவள் முன் செய்த செயலுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல வெகு வெகு நிதானமாக மதுவை அருந்திக் கொண்டு இருந்தான் அவன்.



எவளோ ஒருத்தி கட்டி அணைத்த போது அவனிடம் வந்த ஒவ்வாமை உணர்வு நொடியில் மாறி தன்னவளைக் கண்டதும் எப்படி தன்னால் அவளை வலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வாறு நடந்து கொள்ள முடிந்தது? என்ற எண்ணம் தலைக்குள் ஓடிக் கொண்டு இருந்தாலும்,  அவன் இதழ்களில் ஒருவித கேலிப் புன்னகை.

 

ஆணவத்தின் உச்சியில் நின்றவனுக்கு அவளின் விழிகளில் தெரிந்த மரண வேதனை கூட புத்திக்கு எட்டவில்லை போலும்,

 

எங்கே சென்று விடப் போகிறாள்? தன்னிடம் தானே வந்தாக வேண்டும் என்கின்ற எண்ணம் தலைதூக்கியது.

 

உடல்மொழியில் ஒருவித அலட்சிய பாவனை.

 

பாவம், இன்றோடு அவளின் ஒட்டுமொத்த காதலையும் இழந்து மரண வலியை  தினம் தினம் அனுபவிக்கப் போகின்றான் என அவன் அறியாது போனது தான் விதியின் செயலோ?

 

ஷர்ட்டின் முதலிரு பட்டன்களை திறந்து விட்ட படி எழுந்து நின்றவன் ” ஹே கைய்ஸ் லெட்ஸ் ஹேவ் அ டின்னர்” என்று அழைத்து அவனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பியிருந்தான் அவன்.

 

அனைவரின் ஆரவாரத்திற்கு நடுவே, அவனது குரல் கம்பீரமாக ஒலித்தாலும், அவனையறியாமலேயே கரங்கள் மெலிதாக  நடுங்க ஆரம்பித்திருந்தன.

 

மனதில் ஒருவித தடுமாற்றம் பரவ, விழிகளை திருப்பி அவள் சென்ற பாதையின் வழி சுற்றிலும் சுழற்றினான்.

 

அந்தோ பரிதாபம், தன் பார்வைக்கு அகப்படாமல் போனவளை எண்ணி திடுக்கிட்டு போனது அவனது மனம். 

 

அதற்குள் தனியாக எங்கே  போயிருப்பாள்? என்ற கேள்வி உள்ளே பூதாகரமாக எழுந்திட, அவனது இதழ்களில் விரிந்திருந்த மெல்லிய புன்னகை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. 

 

நெஞ்சுக்குள் ஏதோ ஓர் இனம்புரியாத பாரம் அழுத்த, அதைத் தன் வழக்கமான அலட்சியத்தால் மூடி மறைக்க முயன்றான்.

 

ஆம், முயன்றான். முயல மட்டுமே முடிந்தது.

 

அவளால் அலைபாயும் தன் எண்ணங்களுக்கு தடை விதிக்க முடியாது மிக மோசமாக தோற்று தான் போனான்.

 

அவனால் எப்படி முடியும்? இவ்வளவு நேரமும் அவளைக் காயப்படுத்தி விட்டோம் என்று குரூரமாக ஒருவித அலட்சிய தோரணையில் நின்றிருந்த அவனது முகத்தில் அப்பட்டமான தவிப்பு.

 

அதற்கும் மேல் அவனால் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது கால்கள் அவளைத் தேடி ஓட பரபரக்க, அதன் பின் அவன் சற்றும் தாமதிக்கவில்லை. அலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்துக் கொண்டு மேடையை விட்டு கீழிறங்கினான் அவன். 

 

அவனது கூர்மையான செவிகள் இரண்டும் சுற்றுப்புறத்தை உள்வாங்கத் தொடங்க, அவளின் அழைப்பு மணியின் ஓசை அவனுக்கு சற்று அருகிலேயே ஒலித்தது.

 

சுற்றி நின்றவர்களின் புறம் தன் கூர் பார்வையை சுழல விட்டவனின் இதயத்தின் ஓசை, அங்கு அதீத சத்தத்துடன் அதிர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலையும் தாண்டி அவனுக்கே கேட்டது.

 

செவிகள் கூர்மை பெற விரைந்து, அவளின் அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு அவ்விடம் நோக்கி வேகமாக நடந்தவன் பார்வை அங்கு நின்றவர்களின் மேல் அழுத்தமாக படிந்தது.

 

வேகமாக நடந்து சென்றவன் கால் எதிலோ பட்டு இடறவும் “ப்ச்ச… வாட் த ஃப*…” என்று இதழ்களுக்குள் சலிப்பாக சொல்லிக் கொண்டே தன்னை சமாளித்துக் கொண்டு நகர முற்பட்டவனின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய சட்டென்று கீழே பார்த்தான்.



ஆம், அவளின் அலைபேசி தான் அநாதரவாக கீழே கிடந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே கரங்கள் நடுங்க குனிந்து அவளது அலைபேசியை எடுத்து அதில் ஒளிரும் பெயரைப் பார்த்தான்.

 

“மை லவ்” என்ற பெயருடன் அவளும் அவனுமாக இறுதியாக விமானநிலையத்தில் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மின்னிக் கொண்டிருக்க, அதையே வெறித்து நோக்கிய படி நின்றவன்  எப்படி உணர்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை.



அதீத அழுத்தம் இதயத்தை ஒருங்கே தாக்க, அவளது அலைபேசியை இறுக பற்றிக் கொண்டவன் விழிகளில் சிவப்பேறியது.

 

“யாழ்…” என இதழ்கள் முணுமுணுக்க, வேக வேகமாக மின்தூக்கியை நோக்கி விரைந்தான் ஆணவன்.

 

மனக் கண்ணில் கண்ணீரை சுமந்த விழிகளும் கசங்கிய தோற்றமுமாய் தன் முன் அவள் வந்து நின்ற தோற்றம் மின்னி மறைந்தது.

 

அவள் எங்கே? எங்கே சென்றாள் என்னவள்? நான் தொலைத்து விட்டேனா?

 

உயிர் வரை ஊடுருவிய அவளின் நினைவே இதயத்தை இறுக்கி பிசையும் வலியைக் கொடுத்தது, அவளைக் காணாத அந்த நொடி….



ஒவ்வொரு தளங்களாக மின் தூக்கி நகரும் அந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு நரகமாக கழிந்தன.

 

‘கொஞ்சப் பாடா படுத்தினாய் அவளை?’ அவன் மனமே அவனை சாடியது.

 

நடுங்கும் விரல்களால் அலைபேசியை இயக்கி சில பல கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே வந்தவனின் மறு கரமோ உயர்ந்து எண்ணிலங்கா முறையாக மீண்டும் மீண்டும் தளத்தின் எண்ணை அழுத்திக் கொண்டே இருக்க, அவன் படுத்தும் பாடு தாங்க முடியாமலோ என்னவோ ஒரு சில விநாடிகளிலேயே  மின்தூகியின் கதவுகளும் திறந்தும் கொண்டன.



மொத்த ஹோட்டலுக்கும் உரித்தான அந்த தளத்தை ஒட்டிய கட்டுப்பாட்டு  அறையின் கதவை எட்டி உதைக்காத குறையாகத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இருவரும் அவன் வந்த தோரணையில் திடுக்கிட்டு எழுந்து நின்றே விட்டனர்.

 

அவனது சிவந்த விழிகளும், கலைந்திருந்த தலைமுடியும், அவர்களை ஒருகணம் அதிர வைக்க, 

 

“சார்… நீங்க இங்க…”

 

” நைந்த் ஃப்ளோர் ல இருந்து அரௌண்ட் எயிட் தர்ட்டி டூ நைன் பீ எம்  சிசிடிவி ஃபுட்டேஜை இப்பவே ஆன் பண்ணுங்க! இம்மீடியேட்லி ஐ வான்ட் டு செக் ரைட் நவ்!”

 

“சார், அதுக்கு மேனேஜர் பர்மிஷன்…” என்று இழுவையாக இழுக்க, 

 

சும்மாவே அவன் ருத்ரதாண்டவம் ஆடுவான்.

 

இதில் அவன் வேறு இப்படி கூறவும் கை முஷ்டிகள் இறுக, சினத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

 

அந்த ஊழியனின் ஷார்ட்டின் காலரைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவனோ, ” டூ  வாட் ஐ சே…” என்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தம் கொடுத்து கூறியவனோ,  “இல்லைன்னா இந்த ஹோட்டல் மட்டும் இல்ல நாளைக்கு காலையில நீயும் இருக்க மாட்ட!” என ஆக்ரோஷமாக சீறினான்.



அவனது தோரணையில் நடுங்கிப் போனவனோ, “சார், சா…சாரி… என்னை விட்டுருங்க இப்போ செ….செக் பண்ணிடலாம்” என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாது திக்கி திணறினான், அவனது இறுகிய பிடியில் இருந்து கொண்டே,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவனது ஷார்ட்டின் காலரை விடுவித்து ” ஹரி அப்” என்று கர்ஜிக்க,



அவ் ஊழியனோ, தன் நடுங்கும் விரல்களால் கணினியை இயக்கி, ஒன்பதாம் தளத்தில் மட்டுமே ஆங்காகே பல்வேறு திசைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வெவ்வேறு திரைகளில் ஒளிபரப்பினான்.



அவனது கழுகுப் பார்வையோ திரையை நோக்கிப் பாய்ந்தன.

 

சற்று நேரத்திலேயே கேமராவின் மங்கிய வெளிச்சத்தில், அவன் கண்ட காட்சி அவனது உயிரையே உறைய வைத்தது.

 

அங்கோ, அவனது சரிபாதி சுருண்டு தரையில் விழப் போகும் அந்த ஒரு சில விநாடிகளில்… இருளில் இருந்து பாய்ந்து வந்த ஒரு வலிய கரம் அவளது இடையைத் தாங்கிப் பிடித்தது.

 

அடுத்த கணமே, அவளது சுயநினைவற்ற உடலை அந்த நெடியவன் அப்படியே அள்ளித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, மாற்றுப் பாதை வழியாக அவசர அவசரமாக வெளியேறுவது திரையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்ப, அதீத அச்சமும் ஆத்திரமும் ஒருங்கே தாக்க, கரத்தை ஓங்கி மேசையில் குத்தினான். 

 

அவனது ஆக்ரோஷத்தில் அதிர்ந்து போனவர்களோ, “சார்… இவரு நம்ம ஹோட்டலோட விஐபி பார்க்கிங் ஏரியாவுக்குப் போறாரு…” மற்றொரு ஊழியன் சுட்டிக் காட்டிட, 




சரக்கென்று அடுத்த கணனியின் திரையை வெறித்தான் ஆணவன்.

 

அதிலோ, அந்த நெடியாவனோ தன்னவளைக் காரின் பின் இருக்கையில் மிக பத்திரமாகக் கிடத்தி விட்டு, ஓட்டுநர் இருக்கையில் ஏறி காரை மின்னல் வேகத்தில் கிளப்பி ஹோட்டல் எல்லையை விட்டு வெளியே   செல்வது காணொளியாக ஓட, அவனது இதயமோ இனம்புரியா பயத்தில் ஆட்டம் கண்டது.

 

நொடியில் உலகில் நிகழும் கற்பழிப்பு, ஆட்கடத்தல் செய்திகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து உயிரையே சில்லிட வைக்க, 

 

“நோ… யாழ். உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் பேபிடால்” 

 

பின்னந் தலையை தட்டிக் கொண்டே பித்து பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் அவ் வார்த்தைகளையே அச்சரம் பிசகாமல் இதழ்கள் முணுமுணுக்க ஆரம்பிக்க, அவ் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

 

அவனுக்கே அவன் தைரியம் சொல்லிக் கொண்டான் போலும், மூளை மந்தித்து விட்ட நிலையில் சில கணங்களுக்கு எதுவும் யோசிக்க முடியாது சித்தம் திணறி தவித்தான்.

 

“முட்டாள்… முட்டாள்…திங்க்…. திங்க்…. அவ கிடைப்பா…. யாழ் இஸ் மைன்” என்று மந்திரம் போல கூறிக் கொண்டு இருந்தவன் விழிகளில் சட்டென்று ஒரு பளபளப்பு.

 

” ஹேய்.. கார் நம்பர் பிளேட்டை ஜூம் பண்ணுங்க.. ஜூம் இன் குவிக்லி…” என அவசரப்படுத்தினான்.



அவன் படும் தவிப்பை அங்கு இருந்த இருவரும் கண்கூடாக பார்த்து உணர்ந்து கொண்டு மின்னல் வேகத்தில் செயல்பட்டனர்.

 

அவனது கட்டளையின் படி காரின் நம்பர் பிளேட்டை அந்த இருளிலும் பெரிதாக்கி பார்க்க முயல, அதுவோ மங்கலாகவும் அரைகுறையாகவும் தான் தெரிந்தது.

 

” சார்.. கிளாரிட்டி இல்ல… போலீஸ் கிட்ட…” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே, “MH 02 AB 0001(எம் எச் சீரோ டூ ஏபீ(ஈ) டிரிபிள் சீரோ ஒன்) ” என்றிருந்தான்.




அந்த அந்தகார இருளிலும் அவனது கூரிய விழிகள் அவ் எண்களை துல்லியமாகப் படம் பிடித்திருந்தன.

 

எதிரில் நின்ற இருவருமே அவனை திகைப்பாக பார்த்தனர். கிட்டதட்ட அதில் ஆங்கில எழுத்தை தவிர எண்கள் எல்லாம் மங்கலாக தான் தெரிந்தன.

 

பெரிதுப் படுத்தி பார்த்தே அவர்களுக்கே தெரியாத போது அவனுக்கு எப்படி?

 

ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

அவனோ, அலைபேசியில் எண்களைப் பதிந்துக் கொண்டு இருக்கும் போதே அவனுக்கு பெயரிடப் படாத எண்ணில் இருந்து அழைப்பொன்று வர, சட்டென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

 

அவனது உள்மனம் அடித்துக் கூறியது.

 

இது என்னவள் சம்மந்தப்பட்ட அழைப்பு தான் என்று!

 

முகம் வெளிற ” யாழை விட்டுரு” என்றான் உறுமும் குரலில்,



மறு முனையிலோ, “ஹா… ஹா.. ஹா…” என்று சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்க,

 

இங்கிருந்து ” ஏய்…” என்று எகிறினான். 

 

“நல்லா அனுபவி… கட்டின பொண்டாட்டியை கண்கலங்காம வச்சுக்க துப்பில்லை இதுல யாழ்னு அவ பெயரை ஏலம் போட்டுட்டு வந்துட்டான் ஸ்டுபிட்” என்று கேலியாக சொன்னாலும் அவனது குரலில் அத்தனை கடுமை இழையோடியது.



இங்கோ பல்லைக் கடித்து முயன்று வரவழைத்த பொறுமையுடன் “யார் நீ?”  என்று கேட்டவனின் கேள்விக்கு மறுமுனையில் அவனோ ” உன் வீட்டுக்கு தான் யாழிசையை கூட்டிட்டு வந்துட்டு இருக்கேன் சோ வில் மீட் யூ சூன்” என்று சொன்னவன் அப்போதே அழைப்பை துண்டித்து இருக்க, அவன் கூறிய வார்த்தைகளை முழுதாக உள்வாங்கிக் கொண்டவன் அதன் பின் அங்கே நிற்க முட்டாளா என்ன?



கிளம்பி விட்டான் அவனது வீட்டை நோக்கி…

 

தன்னவளை இழந்து விடுவோமோ? என்ற எண்ணம் கொடுத்த மரண பயமே அவனது ஆணவத்தை அணுவணுவாகச் சிதைக்கத் தொடங்கியிருக்க, 

 

அவனது பயணம் அவளை நோக்கி பயணிக்கலாயிற்று!




👁️ 577 Views
4.9 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.