இரவின் ஆழ்நிலை அமைதியைக் கிழிக்கும் வண்ணம், அவளின் குரல் அவ் அறையையே அதிரும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருந்தது.
“உன்னை அள்ளி எடுத்து… உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…” என இழுவையாக துள்ளிக் குதித்த படி இதழ்களுக்குள் பாடிக் கொண்டு இருந்தவளை, தூக்கத்தில் சொருகிய விழிகளை கசக்கி விட்ட படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நயா.
“உன்னால மட்டும் தான் செம்ம பீல் ரொமான்டிக் சாங்க ஹை டெசிபல்ல இவ்ளோ கேவலமா பாட முடியும்” என்று நெற்றியில் அடித்துக் கொண்டவளிடம்,
“என்ன போல பாத்ரூம் சிங்கர் அஹ் கேவலப்படுத்த உலகத்துல உன்ன போல ஒரு ஆள் இருந்தால் போதும்…” என்றவளோ சட்டென ஞாபகம் வந்தவளாய் “உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது இப்படி தூங்கி வழியவா ஹையோ! …. எப்படி எல்லாம் வாத்தியை கரெக்ட் பண்ணலாம்னு ஐடியா தா” என்ற படி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவளை முறைத்தவளோ ” அடிங்க, அர்த்த ராத்திரில எழுப்பி டாச்சர் பண்ற.. இந்த டைம்ல பேய் கூட நிம்மதியா தூங்கும் போல. எனக்குன்னு வந்து வாச்சிருக்க பாரு!” என்று புலம்பிக் கொண்டே போர்வையை தலையோடு இழுத்து போர்த்திக் கொண்டவள் “ஏதாவது ஒரு படத்துல வர்ற சீனை எக்சிகியூட் பண்ணலாம்” என்றவளை “அதெல்லாம் வேணாம் சம்திங் யுனிக் ஆஹ் சொல்லேன்” என்று சொல்லிக் கொண்டே தோரணையாக கட்டிலில் அமர,
“அப்போ சொந்தமா உன் தலைக்குள்ள இருக்கதை வச்சு யூஸ் பண்ணி யோசிச்சிக்கோ” என்றவள் பதிலில், எதுவும் கூறாது நயாவை முறைத்துப் பார்த்திருந்தாள் யாழிசை.
“ஓஹ் கோட்! என்ற படி நெற்றியை நீவிக் கொண்டே ஹியர் லிசின் யாழிசை, எது நடக்குமோ அது ஷோர் ஆஹ் நடந்தே ஆகும் சோ சும்மா பிளான் போடறதை நிறுத்திட்டு தூங்கு” என்று சொன்னவளோ அவளின் பதிலை கூட எதிர் பார்க்காமல் விழுந்தடித்து படுத்து விட,
“ஹேய்! நயு பேபி எந்திரி டி” என்ற படி அவளை உலுக்கியவளுக்கோ பதில் பூச்சியம் தான்.
சலிப்பாக அவளைப் பார்த்து விட்டு அவளருகில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தவளுக்கோ அவனின் எண்ணம் தான்.
‘நாளைக்கு ஏதாவது பண்ணனும்’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் விழிகள் மெல்ல உறக்கத்தில் மூடிக் கொண்ட அதே நேரம், உணர்வுகளை தொலைத்த முகத்துடன் தொலைதூர நிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் ஜிதன்.
கடந்த ஒரு வாரமாக தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டுவித்துக் கொண்டிருந்த அவள் மீது ஆத்திரம் தான் வந்தது.
அவள் வார்த்தைகளில் சொல்லாத மொத்த காதலும் அவளின் விழிகளில் தொக்கி நிற்கும் கணம், அதில் வீழ்ந்து மீள முடியாது தவிக்கும் தன் மனதை நினைத்து நொந்து கொள்ள தான் முடிந்தது.
திக்கற்று பாயும் தனது எண்ணங்களுக்கு தற்காலிகமாக கடிவாளமிட்டவன், உள்ளம் மட்டும் அல்ல உடல் கூட இறுகி விறைத்தது.
******************
அடுத்த நாள் காலையிலேயே எப்போதும் போல் இல்லாமல் சற்று அதிகாலையிலேயே எழுந்தவள் நயாவினை எழுப்ப ஆரம்பித்து விட்டாள்.
“ஹையோ! தூங்க விடேன் டி” என்று முனகிக் கொண்டே மறுபுறம் திரும்பி தன் தூக்கத்தை தொடர்ந்தவளை கொலைவெறியுடன் முறைத்தவள் ” ஹேய்! ஏழு மணியாச்சு டி ஏழரைக்கு காலேஜ் ல நிக்கிற ஐடியா இருக்கா என்ன?” என்றவளின் வார்த்தைகளில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தவள் “வீட்ல இருந்தால் கூட நிம்மதியா தூங்கி எந்திரிச்சு காலேஜ் வந்திருப்பேன்” என்று சொல்லிக் கொண்டே சோம்பல் முறித்து விட்டு எழுந்து போர்வையை மடித்தவள் என்னவோ ஓர் உந்துதலில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை திரும்பி பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
“அடிங்க நாலரை மணி டி என உச்சஸ்தாயில் கத்தியவள் என் ஹிஸ்டரிலே இத்தனை சீக்கிரம் எழுந்ததே இல்லையே! கிராதகி” என வைத படி மீண்டும் கட்டிலில் படுக்க முயன்றவளை எட்டிப் பிடித்தவள் “ஒழுங்கு மரியாதையா ஃப்ரெஷப் ஆகிட்டு என்கூட வா. ஏர்லியா போய் அட்டென்டன்ஸ் போட்டு வாத்தி மனசுல இடத்தை பிடிக்க போறேன்” என்றவளை,
” நீ போயேன் டி. அதுக்கு ஏன் என்னை போட்டு பழி வாங்குற” என்றவளிடம் ” ஹி ஹி ஹி என தன் வரிசைப் பற்கள் தெரிய புன்னகைத்தவள் “என்ன தான் இருந்தாலும் நட்பு கூட சேர்ந்து பண்ற போல எந்த கிக்கும் வராதே நயு பேபி” என சொன்னவளை ஆயாசமாக பார்த்தவள் ” 25 வருஷமா உன்கூட குப்பை கொட்டுறேன் பாரு என்னை சொல்லணும். எல்லாம் என்னோட விதி அனுபவிச்சு தானே ஆகணும்” என புலம்பிக் கொண்டே குளியறைக்குள் நுழைந்தவள் என்னவோ நினைவு வந்தவளாய் ” எல்லாம் ஓகே நைட்… என்று விட்டு சரி சாரி மிட் நைட் எத்தனை மணிக்கு தூங்குன?” என்று கேட்டவளிடம் ” ஜஸ்ட் ஒன் ஹவர் தான் தூங்கினேன்” என்றவளை அதிர்வாக ஏறிட்டவள் ” லெக்சர் ஹால் ல ஏதும் தூங்கி விழுந்துடாத மா. இப்போ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்ற வரையும் கொஞ்சமாச்சும் தூங்கு” என்று விட்டு கதவை தாழிட்டுக் கொண்டாள்.
ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் வாட்ராப்பிலிருந்து உடையை எடுத்துக் கொண்டவளோ, தனது அன்னையின் அறையிலிருக்கும் வாஷ்ரூமை நோக்கி சென்றிருந்தாள்.
பக்கத்து அறைக் கதவைத் திறந்து லேசாக எட்டிப் பார்த்தாள்.
அவளின் அன்பு அன்னை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
உறக்கத்தில் கூட புன்னகை வாடாத முகத்துடன் தூங்கும் அன்னையை பார்க்க பார்க்க தேவிட்டவில்லை அவளுக்கு, ‘அப்பா, நாங்க உங்கள ரொம்ப மிஸ் பண்றோம். அம்மாவுக்கு ஜிதனை பிடிச்ச போல உங்களுக்கும் ஜிதனை பிடிக்கும் பாஹ்’ என மனதில் பேசிக் கொண்டே சுவரில் பெரிதாக மாலையிடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த தன் தந்தையின் புகைப்படத்தை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு, இதழ்கள் புன்னகையில் விரிய மெல்ல பூனை போல நடந்து குளியலறைக் கதவில் கையை வைத்தவளை “என்ன இவ்ளோ சீக்கிரமா எழுந்திட்ட” என்ற அவளின் அன்னை வாசுகியின் குரலில், மெல்ல நாவினை கடித்து மாட்டிக் கொண்ட குழந்தை போல திருதிருவென விழித்தவள் ” அம்மா என்ன கேள்வி இது? என சிணுங்கியவள் கன்னங்கள் சிவக்க உங்களுக்கு தான் தெரியுமே…” என்றாள் மென்மையாக,
” சோ எப்போ என் மருமகனை வீட்டுக்கு கூட்டிட்டு வர போற?” என்ற அடுத்த கேள்வியில் திணறிவள் “சீக்கிரமே..” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
அவளின் பதிலில் மெலிதாக புன்னகைத்தவர் தன் கணவரின் புகைப் படத்தை ஆழ்ந்து பார்த்த படி “அப்படியே உங்களை போல இருக்கா” என இதழ்களுக்குள் சிலாகித்து கொண்டவர் மெல்ல விழிகளை மூடிக் கொண்டார்.
நொடிகள் நிமிடங்களாக கடக்க, கிட்டத்தட்ட அரை மணித்தியாலதிலேயே அவரச அவசரமாக தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு தனதறைக்குள் வந்தவள் புருவங்கள் உயர்ந்தன.
பின்ன! அவளே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சீக்கிரம் வந்திருக்க, நயாவோ இன்னமும் குளியலறைக்குள் இருந்து வெளிவராமல் இருக்க பொறுமை இழந்து விட்டாள்.
“நயா என்னடி பண்ற இவ்ளோ நேரம்? நேரமாச்சு கிளம்பு” என்று குளியலறைக் கதவை தட்ட,
அவளோ தன்னை சுத்தப்படுத்திக் விட்டு, விட்ட தூக்கத்தை உள்ளே தொடர்ந்து கொண்டிருந்தவள் யாழிசையின் குரலில் தூக்கி வாரிப் போட விழிகளை திறந்தாள்.
“ஹேய் நயா! ஆர் யூ தேர்?” என சற்றே பதட்டத்தில் வந்த தன் தோழியின் குரலில் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவள் “ஓவரா டென்ஷன் ஆகாத. நான் நல்லா தான் இருக்கேன்” என்ற படியே கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் வந்தவளிடம் “வர வர நீ தான் ஓவரா போற. கொஞ்சமாச்சும் என் லவ் கு ஹெல்ப் பண்ற ஐடியா இருக்கா என்ன?” என கேட்டவள் குரல் உண்மையாகவே சற்று கோபமாக தான் ஒலித்தது.
“பாவமேன்னு ஒரு குட்டி ஐடியா போட்டு வச்சிருந்தேன் பட் நீ கோபமா இருக்கியே சோ…” என்றவள் முகத்தை நொடியில் தாங்கி பிடித்தவள் ” ப்ளீஸ்…ப்ளீஸ் சொல்லு டி. என் டார்லிங் ல” என்று கொஞ்சவும்,
“அப்போ எனக்கென்ன வாங்கி…” என அவள் கேட்டு முடிப்பதற்குள் ” சாக்லேட் ஃபிளேவர் கார்ன் ஐஸ் க்ரீம் டீலா?” என்று விழிகள் விரிய கேட்டவளின் வேகத்தில்,
“நீயே ஒரு கஞ்ஜுஸ் , உன்ன எப்படி நம்புறது?” என்றவளிடம் “போற வழில வாங்கி தரேன்” என்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக சொன்னவளை ” ம்ம்.. ம்ம், ஐ ட்ரஸ்ட் யூ” என்று விட்டு ஆடையை எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாள்.
