” ஆஹ் வலிக்குது டி எதுக்கு அடிக்கிற? சொல்லிட்டு அடி” என்று அவளின் பையை வலுக்கட்டாயமாக பிடித்த படி நயா வினவ,
“என்னவோ பெரிய பருப்பு மாதிரி இதை பண்ணு இதை பண்ணாதனு சொன்ன பட் ஸ்டடி லீவ் விட போறதா சொல்லவே இல்லையே” என ஆற்றாமையாக கேட்டாள்.
“அச்சோ அதை நான் மறந்தே போயிட்டேன் டி. வொய் உனக்கு மட்டும் மறந்துடுச்சா என்ன?” என்றாள் விடாமல்,
“அதுனால தானே உன்னை போட்டு சாத்துறேன்” என்று மேலும் அடிக்க முயன்றவளை, “ஸ்டாப் இட் யாழிசை அடுத்து என்ன பண்ண போறதா ஐடியா?” என்ற நயாவிடம்,
“இனி என்ன பண்ண? அதான் லீவ் ஆச்சே ஒன்னும் பண்றதுக்கு இல்ல” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டவளிடம் ” பேபி டோண்ட் ஒர்ரி வாத்தி உன்ன விழுங்கிற போல பார்த்திட்டு தான் போனார் சோ ஹேப்பியா படி. இந்த கேப் கூட அவருக்கு உன் காதலை உணர வைக்க ஒரு சான்ஸ் ஆஹ் இருக்கும்”
“இருக்கும்…இருக்கும்… வில் சீ” என்றவளுக்கு உண்மையாகவே அடுத்த ஒரு வாரத்தையும் தன்னவனை பார்க்காது எப்படி கடத்துவது என்ற எண்ணம் தான் மனத்தில் ஓடிக் கொண்டு இருந்தது.
” ஹான், போதும் போதும் விட்டா உன் பியூச்சருக்கே போய் வந்துடுவ போல. லேட் பண்ணாம அல்வாவை எடுத்து வை” என்று நயா கூற,
” நானே காதல் வலில உளறிகிட்டு இருக்கேன். உனக்கு கொட்டிக்க கேட்குதா?” என வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
அவள் ஏசிக் கொண்டு இருக்கும் போதே, நயா அவளின் பைக்குள்ளிருந்த அல்வாவை எடுத்து சாப்பிட ஆரம்பித்து விட,
“எல்லாம் என் விதி” என நெற்றியை நீவிக் கொண்டே அவளை முறைத்தவள் ” நான், அம்மா அல்வா பண்ணதா சொல்லவே இல்லையே அப்புறம் எப்படி அல்வானு கண்டு பிடிச்ச?” என கேட்க,
“நான் எல்லாம் ஞானி இல்லமா உன்ன போல வாத்தி ப்ரேக்ரன்ஸ் வைச்சு கண்டு பிடிக்க” என்று கூற,
பொறுமை இழந்த யாழிசையோ “இப்போ சொல்ல போறியா இல்லையா?” என கேட்க,
“மார்னிங் ஆன்டி தான் என்னை அலர்ட் பண்ணாங்க” என்ற நயா தோள்களை குலுக்க,
” யூ டூ புரூடஸ்” என்று சீறயவள் அவளை தீயாக முறைத்து விட்டு இடைவெளி விட்டு அமர, “அச்சோ பேபி கோப படாத டி” என்று அவளை நொடியில் கட்டித் தழுவிக் கொண்ட நயாவை மீண்டும் முறைக்க முயன்று தோற்றவள் இதழ் பிரித்து சிரிக்க,
” ஹேய் சத்தமா சிரிக்காத இது ஒன்னும் நம்ம வீடு இல்ல காலேஜ்” என்ற நயா அவளின் வாயில் அல்வாவை திணித்திருந்தாள்.
அன்றைய நாள் அவளுக்கு எப்படி கடந்ததோ என்னவோ அவளவன் தான் அவளின் பார்வை தன்னை ஏன் தீண்டவில்லை என்று சிந்தித்த படி மனதின் ஆர்பரிப்பை அடக்கும் வழியறியாது தவித்து கொண்டிருந்தான்.
“லவ் இஸ் வெரி பெயின்புல்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே கரத்தில் இருந்த அவளது வினாத்தாளை ஆழ்ந்து வெறித்தவன் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.
பின்னே அதில் அவளோ “எனக்கு தெரியாது ஜிதன்” என படிக்காத அனைத்து கேள்விகளுக்கும் அதன் இடைவெளிகளில் எல்லாம் இந்த வசனத்தை அல்லவா எழுதி வைத்திருந்தாள்.
சற்று முன்னர் அவளை அனைவரின் முன்னிலையிலும் காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு போய் நொடியில் ஆத்திரம் தான் பெருகியது.
தெரியாது என்றால் எதுவும் எழுதாமல் கடந்து இருக்கலாமே என்ற எண்ணம் அவனுக்கு தோன்றாமல் இல்லை.
“அடங்கமாட்டா” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவன் அடுத்தடுத்த பக்கத்தை திருப்ப அந்தோ பரிதாபம் அந்த தாள் முழுவதும் ஜிதன் என்ற அவனது நாமத்தை தான் மந்திரம் போல எழுதி வைத்திருந்தாள் பெண்ணவள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை சமநிலை படுத்திக் கொண்டவனோ அதைக் கண்டு கொள்ளாமல் எழுதிய பதிலுக்கு மட்டுமே திருத்தி அதற்கான மதிப்பெண்ணை இட்டவன் பக்கவாட்டு மேசையில் வைத்து விட்டு அடுத்தடுத்த வினாத்தாள்களை திருத்த ஆரம்பித்திருந்தான்.
அவளின் அதீத காதலை இந்த கால இடைவெளி அவனுக்கு உணர்த்தி விடுமா?
ஆம், அவனே எதிர் பார்க்காத அந்த நாளும் வந்தது. அதுவும் கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு நாட்களிலேயே,
கிட்டதட்ட இரண்டு நாட்கள் கடந்த நிலையில் என்றும் போல அதிகாலையில் எழுந்தவனுக்கு என்னவோ வெறுமை சூழ்ந்த உணர்வு தான்.
அந்த வெறுமையிலும் கூட அவளது நினைவுகள் அவனுக்கு வராமலில்லை.
அவளை நினைக்காமல் இருந்தால் தானே அவளின் எண்ணம் வராமல் இருப்பதற்கு!
எதை நினைக்க கூடாது என மனதில் உருப்போட்டுக் கொள்பவர்களுக்கு தெரிவதில்லையே நினைக்க கூடாது என அதையே நினைத்துக் கொண்டிருப்பதை,
ஒரு பெரு மூச்சுடன் பால்கனியில் நின்று தனது உடற்பயிற்சியை எடுக்க ஆரம்பித்தவனுக்கு சலிப்பாக இருந்தது.
மனம் ஒருநிலையில் இருந்தால் தானே!
அவளின் சீண்டல்கள் ஆழ்ந்த பார்வை பரிமாற்றங்கள் என வரிசைகட்டி அவனது நினைவுகளை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள் பெண்ணவள்.
“ஓஹ் காட்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே பாதியில் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தவனுக்கு அவளிடம் கதைத்து விட்டால் என்ன என்கின்ற எண்ணம் நொடிப்பொழுதில் தோன்றியது.
அவ் எண்ணம் தோன்றிய நொடி அவனுக்கோ தூக்கி வாரி போட்டது.
“நோ, தப்பு ஜிதன். அவ உன் ஸ்டூடன்ட் அண்ட் மோரோவர் இப்போ அவ படிச்சிட்டு இருப்பா டிஸ்டர்ப் பண்ண கூடாது” என தனக்குள் மீண்டும் மீண்டும் உருபோட்டுக் கொண்டிருக்க,
இங்கோ அவனின் எண்ணத்தின் நாயகி, அவளவனுக்காக பிரத்தியேகமாக அவளே பார்த்து பார்த்து நெய்த கர்ச்சீப்பில் இரு இதயங்கள் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பதைப் போல எம்பிராய்டரி மூலம் மிக நேர்த்தியாக தைத்து கொண்டிருந்தாள்.
“பெர்பெக்ட்” என சொல்லிக் கொண்டே கைக்குட்டையை உயர்த்தி பார்த்தவள் ” வாத்தி தலைகீழா நின்னு என்னை அவாய்ட் பண்ணாலும் ஐ டோண்ட் மைண்ட். எக்ஸாம் முடிஞ்ச பிறகு கர்சீப் கொடுக்காம வர மாட்டேன்” என சொல்லிக் கொண்டவள் கவனமாக தனது பைக்குள் வைத்து பத்திரப்படுத்தி விட்டு மிகுந்த சோர்வுடன் புத்தகத்தை எடுத்து விரித்தவளுக்கு அந்த காலை பொழுதிலும் விழிகள் இரண்டும் தூக்கத்திற்கு கெஞ்சின.
“என்ன மேடம், கர்சிஃப் ரெடி பண்றப்போ தூக்கம் வர்ல போல பட் படிக்க உட்கார்ந்தா மட்டும் எப்படி மா கண்ணை கட்டுது?” என்று கேட்டுக் கொண்டே கரத்தில் காஃபி கப்புடன் அறைக்குள் நுழைந்திருந்தார் வாசுகி.
“மா! வர வர இந்த நயா கூட சேர்ந்து நீங்களும் என்னை கிண்டல் பண்ண கத்துகிட்டீங்களா?” என்றவள் இதழ்களை சுளிக்க,
” என்னவோ தானா ஓவர் ப்ளோ ஆகுதே” என்றிட,
” மா, பேசாம நீங்களும் என் பெஸ்டியா பிறந்திருக்கலாமோ?” என்று கன்னம் தட்டி யோசித்தவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தவர் ” நயா சொன்னா! கேப் ல மர கழண்ட போல பேசுவானு இப்போ தான் நேர்ல பார்க்குறேன்” என்ற வாசுகியின் இதழ்கள் புன்னகையில் விரிய,
“வாட் இதை வேற சொன்னாளா? என்றவள் “ஹான், என்ன இப்போ மர கழண்ட போல பேசிட்டேன்?”
” பின்ன நான் உன்ன பெத்த அம்மா அதுக்கும் மேல க்ளோஸ் ப்ரெண்ட் போல தான் உன்கிட்ட நடந்துப்பேன் அப்படி இருக்கப்போ என்னவோ நான் உன் பெஸ்டியா பிறக்கலனு பீல் பண்ற” என்று சொன்னதும் தான் மூளையில் மின்னல் வெட்ட ‘ ஹி ஹி ஹி… ‘ என தன் முத்து பற்கள் தெரிய சிரித்து வைத்தாள் பாவை.
” போதும் போதும் காஃபி அஹ் குடிக்க மறந்துடாத டி” என்று விட்டு புன்னகை வாடாமல் அறையை விட்டு வெளியேறி இருந்தார்.
” ஐ பீல் ரிலாக்ஸ்ட்” என்று சொல்லிக் கொண்டே காஃபியின் நறுமணத்தை விழிகள் மூடி நுகர்தவள் “இருந்தாலும் என் ஜிதன் ப்ரேக்ரன்ஸ் போல வருமா?” என்றவளின் மனசாட்சியே ‘ இது உனக்கே ஓவரா இல்ல ‘ எனக் கேட்டு காரி உமிழ்ந்தது.
இதழ்களை பிதுக்கி “என்னை டேமேஜ் பண்ண கேப் ல வந்துடுவியே” என கறுவிக் கொண்டே காஃபியை மிடறு விழுங்கிய அதே நேரம், அவளின் அலைபேசியோ சத்தமாக ஒலிக்க,
” நான் ஏதாவது வாய்க்குள்ள போட்டாலே இவளுக்கு மூக்கு வேர்த்துடும்” என்று சொல்லிக் கொண்டே எட்டி மேசையிலிருந்த அலைபேசியை எடுத்து வழமை போல திரையை பார்க்காமலேயே “நிம்மதியா காஃபி குடிக்க விடுறியா?” என திட்டியவள் மறுமுனையில் கேட்ட எதிர் பாராத குரலில் அவளின் உச்ச முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கியது.
அவளின் மொத்த உடலும் சிலிர்த்தடங்க காரணமானவன் வேறு யாராக இருக்க முடியும்?
அவளின் குரலைக் கேட்கவெனவே கட்டவிழ்ந்து பாயும் தனது மனதை அடக்கும் வழியறியது அவளுக்கு அழைப்பை எடுத்திருந்தான் அவளின் ஜிதன்.
“………….”
மறுமுனையில் அமைதியாக இருக்க, “இசை” என்றான் மென்மையிலும் மென்மையாக,
“ஹான், என்ன?” என்றாள் திக்கி திணறி,
கரை உடைத்த வெள்ளமென பேசும் அவளின் குரல், இப்போது திணறலாக ஒழித்ததும் அதுவே அவனது இதழ்களில் மென் புன்னகையை தோற்றுவித்திருந்தது.
அவளோ, தான் கனவு ஏதும் கண்டு விட்டோமோ? என தன்னை தானே கிள்ளி பார்த்து பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டே வலியில் முனகினாள்.
” இசை வாட் ஹேப்பன்?” என்றான் தவிப்புடன்,
அவளுக்கு எங்கே அவன் தவிப்பாய் கேட்டது எல்லாம் கேட்கும்? உணர முடிந்தால் தானே!
இன்னுமே அவன் தான் தனக்கு அழைப்பை எடுத்தானா? என்ற அதிர்வில் இருந்து மீளாதவளாய், “என் நம்பர் எப்படி? நீங்க உண்மையாவே பேசுறீங்களா என்கூட?” என்று கேட்டவளுக்கு மேனியெல்லாம் அவளையும் மீறி சூடாகி சிவந்தது.
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டவன் ” ஸ்டூடன்ட் நம்பர் கண்டு பிடிக்க முடியாதா என்ன?” என்று கேட்டு அவள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒற்றை பதிலை அளித்திருந்தான் அவன்.
ஆக அவன் தனக்கு அழைப்பை எடுத்தது நிஜம் என உணர்ந்த தருணம்.
அவளின் கரமோ அலைபேசியில் அழுத்தம் கொடுக்க, உணர்ச்சி வசப்பட்டு “யாஹ் ஹூ ஹூ ஹூ.. ” என்று வாய் விட்டு கத்தியவள் குதித்து ஆட ஆரம்பித்து விட, மறு முனையில் அவளின் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு இருந்தவனின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய மாறாக அவனது இதழ்களோ தாராளமாக புன்னகையில் விரிந்து கொண்டன.
