Menu

நொடி – 13

இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் அப்போது தான் தன் அன்னையின் வெகுநேர மௌனத்தை கவனித்தாள்.

 

சட்டென்று பின்னால் திரும்பி பார்த்தாள்.

 

உறங்கவில்லை என்று தெரிந்தது.

 

விழிகள் மூடி இருந்தாலும் என்னவோ ஏதோ சிந்தனையில் இருக்கின்றார் என உணர்ந்து கொண்டவள் “அம்மா” என்றாள் மிக மிக மென்மையாக,

 

பட்டென்று விழிகளை திறந்தவர் என்னவோ ஏதோ என்று”என்ன யாழு?” என்றார் சற்றே பதட்டமாய்,

 

புருவங்கள் இடுங்க அவரை பார்த்தவள் “என்னவோ என்கிட்ட மறைக்கிறீங்களா மா?” என்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக கேட்டு இருக்க, அவரோ உள்ளே திடுக்கிட்டு போனவர் அவள் தன்னை ஆராயும் பார்வை பார்க்கவும் சுதாரித்து “நான் என்னடி மறைக்க போறேன்?” என்று சொல்லவும் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வரவும் சரியாக இருந்தது.

 

சட்டென காரும் நிறுத்தப்பட, அதற்குள் வந்து விட்டோமா? என்ற எண்ணத்துடன் மெல்ல திரும்பி வெளியில் பார்வையை பதித்தவள் இதழ்களோ ” தாஜ் பேலஸ் வெட்டிக் ஹால்” என உச்சரித்து இருந்தன.

 

அவளுக்கோ ஒன்றும் புரியாத நிலை தான்.

 

வீட்டுக்கு செல்லாமல் இங்கு எதற்கு என்ற கேள்வி எழ, ” நகுல் இங்க ஏன் ஸ்டாப் பண்ணீங்க?” என்று டிரைவரிடம் கேட்டவள் பார்வையை சுற்றுப் புறத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தது.




” மேடம் தான்…” என்று இழுவையாக சொல்ல,

 

இப்போது அவளது பார்வை கார்க் கதவை திறந்து கொண்டு வெளியேற முற்பட்ட அன்னை மீது அழுத்தமாக பதிந்தது.



“அம்மா யாருக்கு வெட்டிங் நாம எதுக்கு இங்க வந்தோம்?” என்று கேட்டுக் கொண்டே அவளும் கார் கதவைத் திறந்து கொண்டு  வெளியே இறங்க, அப்போது தான் அங்கு தன் தூரத்து உறவினர்களும் திருமண மண்டபத்திற்குள் நுழைவதும்  தெரிய,

 

அவள் சுதாரித்து அடுத்த கேள்வியை கேட்கும் முன்னரே “என்கூட வா சொல்றேன்” என்று சொன்ன வாசுகி அவளின் கரத்தை பற்றிக் கொண்டு மண்டபத்தின் பின் புறமாக செல்லும் மாடிப் படிகளில் அவளை வேக வேகமாக கூட்டிக் கொண்டு இல்லை இல்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கிட்டதட்ட அவளை இழுத்துக் கொண்டு தான் சென்றார்.



அவரின் வேகத்துக்கு 

ஈடுகொடுக்க முடியாது “மா மெதுவா எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று கேட்டவளுக்கு என்னவோ தன் தலையில் இடியை இறக்கத் தான் போகின்றார் என திண்ணமாக தெரிந்தது.

 

அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஓர் அறைக்குள் அவளை அழைத்துக் கொண்டு வந்து கதவை தாழிட்டு விட்டு அதன் மேல் சரிந்து மூச்சு வாங்க நின்று இருக்க, “ஏன் இந்த வேகம் மா? என்ன தான் பிரச்சனை எதுக்குமே ஒழுங்கா பதில் சொல்றீங்களே இல்லையே” என அங்கிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவள் குரலோ  தாங்க மாட்டாமல் இயலாமையில் ஒலித்தது.

 

நலிந்து ஒலித்த அவளது குரலில் அவருக்கு அவளை எப்படி தான் சமாளிக்கப் போகின்றோம் என்ற எண்ணம் தான்.

 

“யாழு நான் சொல்றதை பொறுமையா கேளு” என்றபடி அவளருகில் அமர்ந்தவர் “இன்னும்…  கொஞ்…கொஞ்ச நேரத்துல உனக்கும் ஜி..ஜிதனுக்கும் மேரேஜ்” என திக்கித் திணறி தான் கூற வந்ததை கூறியவருக்கு இன்னுமே படபடப்பு அடங்கியபாடு தான் இல்லை.

 

பின்னே! அவர் அடுத்து கூறவிருக்கும் விஷயம் அல்லவா இன்னுமே அவரின் இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டு இருந்தது.

 

அவளோ, நித்தமும் ஜிதன் ஜிதன் என்று அவன் நினைப்பில் இருப்பதால் ஒருவேளை தன் காதில் ஏதும் தவறாக விழுந்து விட்டதா?  என மலங்க மலங்க விழித்தவள் “எனக்கு புரியல என்ன சொன்னீங்க?” என்று மீண்டும் கேட்டாள் பாவை.

 

ஆம், பாவை தான் இவர்கள் ஆடப்போகும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவளை பாவையாக வைத்து ஆட்டத்தை தொடங்கவிருக்கின்றனர் என அவள் அறியாது போனது தான் விதியின் சதியோ?

 

” உனக்கும் ஜிதனுக்கும் கல்யாணம் முகூர்த்த நேர்த்துக்குள்ள ரெடியாகு யாழு” என்றவர் பார்வை மூடப்பட்டு இருந்த குளியலறை கதவில் பதற்றமாய் படிந்து மீள,



“என்னமா நடக்குது? எங்கிட்ட ஜிதன் இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே” என்றவளுக்கு மனதில் சந்தோஷம் ஏற்படுவதற்கு பதிலாக அவரது முகத்தில் தெரிந்த அதீத பதட்டம் அவளுக்குள் பெரும் குழப்பதைக் கொடுக்க, ” எப்படி யாழு சொல்லுவார்? எஸ், ஹி லாஸ்ட் ஹிஸ் மெமரி. ஜிதனுக்கு உன்ன மட்டும் இல்ல என்னை கூட யார்னு தெரியாத நிலைமைல உன்கூட இதெல்லாம் எப்படி ஷேர் பண்ணுவார்?” என்று அடக்க மாட்டாமல் விழிகளில் கண்ணீர் வழிய கூறியவர் குரல் உடைந்து ஒலித்தது.



தான் கேட்ட விடயத்தில் அவளுக்கோ உச்சகட்ட அதிர்வு.

 

என்னவோ சில்லென்ற உணர்வு இதயப் பகுதியீனூடாக அழுத்தமாக ஊடுருவதை உணர்ந்தவளுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து வழிய தலையோ சுற்றிக் கொண்டு வந்தது.

 

விழித்திரை மேல் நோக்கி சொருக அப்படியே மெத்தையில் மயங்கி சரிந்து போனாள் பெண்ணவள்.

 

தன் மகள் இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாள் என சேலை தலைப்பால் பொங்கி வந்த அழுகையை அடக்கிய படி வாயை மூடி அழுது கொண்டே அவளை வெறித்திருந்தவருக்கு அவள் மயங்கி சரியவும் உயிரே போய் விட்டதை போல நடுநடுங்கி போனார்.



சட்டென அவளருகில் விரைந்து அவளின் கன்னத்தை மாறி மாறி பலமாக தட்டி யாழு…யாழு…யாழு… என்னை பாருமா யாழு” என்று அழுது கரைந்தவர் சத்தம் அந்தோ பரிதாம்பம் அந்த அறைக்குள் மாத்திரமே ஒலித்துக் கொண்டிருக்க, அப்போது தான் பூட்டி இருந்த குளியலறைக்கு கதவின் பின் இவ்வளவு நேரமும் மறைந்திருந்த வாசுகியின் தோழி ஷீலாவோ இதற்கு மேலும் அங்கு இருக்காது பதறிப் போய் வாசுகியை நெருங்கி இருந்தார்.

 

” வாசுகி அழத டி. அறிவிருக்கா உனக்கு? பொண்ணுகிட்ட பொறுமையா சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி தான் போட்டு உடைப்பியா?” என்று கடிந்து கொண்டு அவளை ஆராய்ந்தவர் விம்மி வெடித்து அழுதுக் கொண்டு இருந்த வாசுகியை பார்த்து அழாத வாசுகி. சாதாரண அதிர்ச்சி மயக்கம் தான். தயவு பண்ணி பொறுமையா ஹேண்டில் பண்ணு. அவளே சோர்ந்து போய் வந்து இருக்கா நீயும் இப்படி பண்ணுனா எப்படி? அவன் வேற இன்னொரு பக்கம் இரும்பு பாறை போல முறுக்கிட்டு கல்யாணத்துக்கு இஷ்டம் இல்லனு சுத்திட்டு இருக்கான்” என்று ஆற்றாமையாக சொன்னவர் பக்கவாட்டிலிருந்த தண்ணீர் குவளையிலிருந்த நீரை எடுத்து யாழிசையின் வதனத்தில் குளிர் பரவ  துடைத்து விட்டு அவள் அணிந்திருந்த இறுக்கமான ஆடையை லேசாக தளர்த்தி விட்டு அவளின் வதனம் நோக்கியவர் பார்வை அவளை விட்டு இம்மியும் நரகவில்லை.

 

ஆம் வாசுகி பார்க்கத் தவறியிருந்த அவளது முக உணர்வுகளை மறைவிலிருந்து அவர் பார்த்திருந்தாரே!



தன் தாய் கூறிய விடயத்தில் அதுவும் அவள் உயிருக்கு மேலாக காதலிக்கும் ஒருவன் தன்னை மறந்து விட்டான் என்று அறிந்த கணம், அதை அவள் ஜீரணிக்க முடியாமல் பட்டபாடை கண் கூடாக கண்ணவருக்கு  அவளின் காதலின் ஆழத்தைக் கண்டு மேனி முழுதும் ஒருகணம் புல்லரித்து போனது.

 

ஒரு பெண்ணால் இப்படியும் காதலிக்க முடியுமா? என வியந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே கண்கள் மேல் நோக்கி சொருக பின்னோக்கி மெத்தையில் சரிந்தவளை ஓர் அதிர்வுடன் பார்த்தவர் வாசுகியின் அழுகையில் சுயம் வரப் பெற்று தான் மறைவிலிருந்து அவளை நோக்கி விரைந்திருந்தார்.

 

அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷீலா அவளிடம் மெலிதாக அசைவு தெரியவும் விசும்பிக் கொண்டு இருந்த வாசுகியை கண்களால் அமைதியாக இருக்குமாறு பணித்து விட்டு அவள் விழிக்கும் வரை காத்திருக்க, மெல்லத் தன் இமைகளை பிரித்து தன் முன் அமர்ந்திருந்த முன் பின் தெரிந்திராத பெண்மணியை பார்த்து புருவ முடிச்சுடன் எழ முட்டவளுக்கு அப்போது தான் ஒன்றன் பின் ஒன்றாக தான் இருக்கும் இந்நிலையே புத்திக்கு உரைக்க, விருட்டென எழுந்து நின்றவளுக்கு நிற்க கூட திராணியற்று கால்களும் உடலும் கிடுகிடுவென நடுங்கின.




“கவனம் மா கொஞ்சம் இரு” என அவளின் கரத்தை பற்றிய அப் பெண்மணியை ஓர் பார்வை பார்த்து விட்டு மெல்ல அவரின் கரத்தில் அகப்பட்டிருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டவள் “நான் ஜிதன் கூட பேசிட்டு வரேன். அவர் எங்க இப்போ?” என்று கேட்டவன் குரல் திடமாக ஒலித்தது.

 

“அதுக்கு முதல்ல நான் சொல்ல போறதை கேட்டுட்டு போ யாழிசை” என்று சொன்னது வேறு யாருமல்ல ஷீலா தான்.

 

“நீங்க யார்? நீங்க சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்?” என்று கேட்டவள் கதவை நோக்கி செல்ல ஓரடி எடுத்து தான் வைத்திருப்பாள் அதற்குள் அவரோ, “ஜிதனோட அம்மா” என்று கூறவும், அந்த ஒற்றை பதிலில் அவளுக்கோ மீண்டும் தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

 

இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் தான் அவளும் தாங்குவாள்?

 

இதயப் பகுதியில் விட்டு விட்டு வலித்த சுள்ளென்ற தாழ முடியாத வலி, அதீதமாக பரவுவதை போல் உணர்ந்தவள் விழிகளை மூடித் திறந்து கீழ் இதழ் கடித்து விடுவித்துக் கொண்டே வலக் கரம் உயர்த்தி இடது மார்பை நீவிக் கொண்டாள்.

 

இவ்வளவு நேரமும் அவளின் அன்னையின் முகம் கூட பார்க்காது நின்றிருந்தவள் மெல்ல பக்கவாட்டாக திரும்பி “இங்க என்னவோ பண்ணுது மா”  என தன் இடது மார்பை சுட்டிக் காட்டியவள் செ..செத்துடுவேனோனு பயமா இருக்கு. நான் ஜிதன் கூட வாழணும் ப்ளீஸ் என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுங்க” என மன்றாடும் குரலில் தொண்டைக் குழி ஏறி இறங்க கேட்டவள் உடலில் அத்தனை நடுக்கம்.

 

தன் அன்னை கூறப் போகும் விடயத்திற்காக தன் மனதைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர  போராடிக் கொண்டு நின்றவளின் செவிகள் கேட்பதற்கு ஏதுவாக கூர்மை கொண்டன.

 

” ஷீலா என்னால அவளை இப்படி பார்க்க முடியல நீயே சொல்லிடு” என்று நா தழுதழுக்க சொல்லியவர் தன் மகளின் கரத்தை பற்றி கட்டிலில் அமர வைத்தார்.

 

அவன் தன்னை தன் காதலை மொத்தமாக மறந்து விட்டான் என்ற தாழ முடியாத வலியே இன்னும் அவளின் இதயத்தை அழுத்தி பிசைந்து கொண்டு இருக்க, அடுத்து வர போகும் இடியை தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா? 

 

தலையோ விண் விண்ணென்று தெறித்தது.

 

தன்னையும் மீறி கன்னங்களில் வாழ்ந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு தன் எதிரே அமர்ந்திருந்த பெண்மணியை நோக்கி ” அவ…அவருக்கு யாரும் இல்லனு சொன்னாரே” என்றாள் குரல் திணற,

 

“ஃபேமிலி ப்ராப்ளம் யாழிசை. நானும் அவனும் பிரிஞ்சி இருக்க வேண்டிய சூழ்நிலை எங்களை பார்க்க விடாம பண்ணிடுச்சு. அவனுக்கு நான் மட்டும் தான் இருக்கேன் என்னால அவனை ரொம்ப நாள் விட்டு பிரிஞ்சி இருக்கிற எண்ணம் இல்ல அதனால திரும்பி வந்துட்டேன்” என்றவரை அவளின் பின்னால் அமர்ந்திருந்த வாசுகி அதிர்வாக நோக்க, அவரைப் பார்த்து விழிகளை மூடித் திறந்து இரு பக்கமும் தலை அசைத்த ஷீலா விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டிருந்த யாழிசையை பார்த்துக் கொண்டே ” நீ லண்டன் போன பிறகு கிட்டத்தட்ட சிக்ஸ் மந்த்ஸ்’ கு அப்புறமா என் பையன் ஜிதனுக்கு யாருமே எதிர் பார்க்காத போல ஆக்சிடென்ட் ஆகிறிச்சு மா. பக்கத்துல இருக்கவங்க எல்லாம் சேர்ந்து அவனை ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிட்டு அவனோட கால் ஹிஸ்டரி வச்சு உன் அம்மாவுக்கு இன்பார்ம் பண்ணி இருக்காங்க. அப்புறமா அவன் கண் முழிச்ச பிறகு உன் அம்மாவையே அவனுக்கு யார்னு தெரியல. அப்புறம் தான் தெரிஞ்சது ஜிதன் பழசை எல்லாம் மறந்திட்டான்னு, அவனுக்கு கூடவே இருந்து உன் அம்மா எல்லாம் பார்த்திட்டு இருக்க டைம் தான் அவனை தேடி நான் வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விம்மி வெடித்துக் கொண்டு வரும் அழுகையை அடக்கிக் கொண்டே “என்..என்கூட ரெண்டு வருஷமா ஃபோன் ல மெசேஜ் பண்ணது யார்?” என்றவள் உள்ளம் உள்ளே தவியாய் தவித்துக் கொண்டு இருந்தது.

 

குரல் வழியாக பேசினால் தன்னைப் பார்க்க எண்ணம் செல்கிறதென்று  குறுஞ்செய்தி வழியாக கொஞ்சிக் கெஞ்சி சமாதானம் செய்தது யார்?இவ்வளவு நாளும் தன்னவன் என்று யாருடன் குறுஞ்செய்தி வழியாக பேசிக் கொண்டு இருந்திருக்கிறேன் என்ற கேள்விகள் ஒவ்வொன்றாக அவளின் மனதோ ஊசியால் குத்துவத்தைப் போல வலிக்க ஆரம்பித்தது.

 

” அவனோட ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்சா நீ அங்க இருந்து வந்துடுவ. உன் பியூச்சர் ஸ்பாய்லாக கூடாதுன்னு நினைச்சு தான் உன் ப்ரெண்ட் நயாகிட்ட கொடுத்து ஜிதன் போல பேச சொன்னேன்” என்றதும் தன்னை சுற்றி நடந்தேறிய நாடகத்தை நம்பி தான் இவ்வளவு தூரம் ஒன்றும் அறியாத முட்டாளாக இருந்திருக்கின்றேனே எனத் தன்னை நினைத்தே கழிவிரக்கமாக இருந்தது.

 

“ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டவள் குரல் ஈனமாக ஒலித்தது.

 

அவரோ மௌனமாக இறுகிப் போய் அமர்ந்து இருந்தார்.

 

கேட்கும் விடயங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவளுக்கு என்ன பதில் சொல்லி விட முடியும்?

 

லண்டனில் இருக்கும் போது கிட்டத்த அவர் கூறியதை போலவே ஆறு மாதங்களின் பின்னர் அவன் பெரிதாக குரல் வழியாக அழைப்பில் பேசுவது இல்லை என்றாலும்  குறுஞ்செய்தி மட்டும் நேரத்திற்கு நேரம் வந்துவிடும்.

 

பொதுவாக ஜிதன் எல்லைத் தாண்டிய சில்மிஷ பேச்சுக்கள் எப்போதும் பேசியது இல்லை ஆனால் அப்பெண்மணி கூறிய அந்த  ஆறு மாதங்களுக்கு பிறகு இருந்திருந்து வரும் எல்லைத் தாண்டிய  காதலர்களுக்கே உரித்தான சில்மிஷ பேச்சுக்கள் கூட வந்ததே! ஆக நயா தான் சந்தேகம் வராத வண்ணம் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கின்றாள் என்று எண்ணும் போதே அத்தனை ஆத்திரம்.

 

ஆரம்பத்தில் வெட்கத்தில் அக் குறுஞ்செய்திகளை தவிர்த்தாலும் அவனிடம் இருந்து சீண்டும் பேச்சுக்கள் வராதா? என காத்திருந்த நாட்களும் நினைவில் வந்து தொலைத்தன.

 

தன் ஜிதன் மேலான ஆழமான காதலைத் தெரிந்திருந்தும் கூட அவள் தன்னிடம் எதுவும் கூறவில்லையே! என்று நினைத்தவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து நிகழ்வுகளும் உச்சந்தலையில்  சம்மட்டியால் அடித்தது போல ஞாபகத்துக்கு வந்தது.

 

“ஆன்டி இப்..ப்..இப்போ அவருக்கு ஹெல்த் எப்படி இருக்கு?” என்று கேட்டாள் தன்னைத் திடப் படுத்திக் கொண்டு,

 

“ஹி இஸ் பைன் மா… பட் டாக்டர் அவனுக்கு பழைய நினைவுகளை ஞாபக படுத்துற போல நடந்துக்க வேணாம்னு சொன்னார் சோ உன்னை பத்தி அவனுக்கு எதுவும் நாங்க சொல்லவே இல்ல. உன் அம்மா என் ப்ரெண்ட் அவளோட பொண்ணை தான் உனக்காக பார்த்திருக்கேன்னு சொல்லி இருக்கேன்” என்றிட,

 

“ம்ம்” என்றவளுக்கு இருவரையும் உலுக்கி மேலும் மேலும் கேட்டு விட துடித்த கேள்விகளை கேட்காது இறுகிப் போய் அமர்ந்து இருந்தாள்.

 

“உன்கிட்ட இங்க வந்ததுக்கு பிறகு எல்லாமே பேசிக்கலாம்னு இருந்தோம். நீ வந்த அன்னைக்கே உனக்கும் அவனுக்கும் முகூர்த்த நாள், நேரம் எல்லாம் பார்த்து கல்யாணம் பிக்ஸ் பண்ணியாச்சு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் கேட்ட கேள்வியில் அவருக்கு தான் தூக்கி வாரிப் போட்டது.

 

👁️ 196 Views
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.