ஆயிற்று! முழுதாக இரண்டு நாட்கள் கடந்தாயிற்று!
பால்கனியில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் தலை சாய்த்து நுழைவாயிலை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.
ஆம், திருமண நாளன்று மண்டபத்தை விட்டு சென்றவன் இன்னும் வீட்டிற்கு வந்து சேரவில்லை.
ஷீலா கூட இந்த இரண்டு நாட்களாக ஒருவித இருண்ட முகத்துடன் தான் சுற்றிக் கொண்டு இருக்கின்றார்.
தான் பேச சென்றாலும் கூட சமாளிப்புடன் பதில் சொல்வதும் அவளால் உணர முடிந்தது.
வாசுகியை சொல்லவும் வேண்டுமா? அவரும் அறைக்குள் முடங்கிக் கிடக்க, தன் அன்னையின் மௌனத்தில் அவரிடம் பேச வேண்டும் என எண்ணிய எண்ணத்தைக் கூட அடியோடு தவிர்த்திருந்தாள்.
வாய் விட்டு கதறி அழ வேண்டும் போல இருந்தது.
அவன் ஒருவன் தான் அவள் அருகில் இல்லையே தவிர இரு நாட்களாக அவள் என்னவோ அவன் அறைக்குள் தான் தனித்து விடப்பட்டிருந்தாள்.
இதோ இப்போது வரை எதிலும் ஒன்ற முடியாது அவனது அருகாமையை ஏங்கி மனம் பரிதவிக்க, விழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள் பாவை.
ஆனால் அவன்?
****************************
ஆடம்பரத்திற்கு பஞ்சம் ஏது எனும் வகையில் நவீனக் கட்டடக்கலைக்குச் சான்றாக, முழுக்க முழுக்கக் கண்ணாடியாலான ஆன சுவர்களுடன் வீற்றிருந்தது அவனுக்கென பிரத்தியேமாக அமைக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ்.
அது மட்டுமா என்ன?
அவனுக்கே அவனுக்கான தனிமை பொழுதுகளை மனம் விரும்ப, அதற்கெனவே கடற்கரையுடன் ஒட்டிய அப் பரந்து விரிந்திருந்த இடத்தினை பல மில்லியன்களை இரைத்து சொந்தமாக்கியும் கொண்டான்.
இதோ மனம் அலைக்கழிக்க கெஸ்ட் ஹவுஸ் உடன் ஒட்டிய ஆள் அரவமற்ற அப் பரந்து விரிந்த கடற்கரை மணலில் தன் கட்டுடல் மேனி அப்பட்டமாக தெரிய வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வானத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தான் ஜிதன்.
இமைக்க மறந்த அந்த விழிகளில் என்ன இருந்தது? என்ற கேள்வி தன்னையே நீண்ட நேரமாக உறுத்து விழித்துக் கொண்டிருக்கும் அவன் மீது ஆகாயத்துக்கே எழுந்தது போலும்,
மெலிதாக இருண்டிருந்த ஆகாயத்திலிருந்து ஒரு துளி மழைத் தூறலாக அவனது கன்னத்தில் பட்டுத் தெறிக்க, அதைக் கூட உணரும் நிலையற்றவனாய் அவனது எண்ணங்கள் மொத்தமும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பிய தருணத்தில் நடந்தவைகளில் சிக்கி சிதைந்துக் கொண்டிருந்தன.
அவனது சிந்தையில் உதித்த கேள்விகளுக்கு விடையாக அவனது அன்னை கூறிய பதில்களிலேயே தனக்குள் இவ்விரண்டு நாட்களும் மீட்டி பார்த்து அதிலேயே உழன்று கொண்டிருந்தான்.
ஈகோ வினால் நிறைந்தவன் அவன்.
அதனாலேயே இதனை சற்றும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலை அவனுக்கு,
ஆத்திரம் ஆத்திரம் ஆத்திரம்.
எதிரில் யார் வந்தாலும் அடித்து நொறுக்கி விடும் ஆத்திரத்தில் தான் அங்கிருந்து கிளம்பியிருந்தான் அவன்.
முதல் முறை தான் எதிலோ தோற்று போய் விட்ட உணர்வு.
அவனது உச்சகட்ட ஈகோவின் விளைவாய் ஒரு நொடி தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா? என்கின்ற எண்ணம் கூட அவனுக்கு வந்து போக, அதிர்ந்து விட்டான் அவன்.
ஒற்றைக் கரம் உயர்த்தி, கேசத்தில் உயர்த்தி போடப்பட்டிருந்த கூலர்ஸை எடுத்து மீண்டும் விழிகளில் அணிந்து கொண்டவன் அப்படியே எழுந்து அமர்ந்தான்.
“நோ வே ஐ அம் நாட் அ லூசர். எனக்கு அவளை பிடிக்கல ஐ ஹேட் ஹேர். தட்ஸ் ஆல்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவன் சிந்தையை ஈகோ எனும் அரக்கன் முற்றிலுமாக மறைத்திருந்தது.
இப்போது ஈகோ என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவனது கர்வம், அவளது ஒற்றைத் துளி கண்ணீருக்கு முன்னால் மண்டியிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றறியாது போனான் ஆணவன்.
இங்கோ கன்னங்களை தாண்டி வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே எழுந்து மெல்ல அவனின் அறைக்குள் நுழைந்தாள்.
சற்று நேரம் நிதானமாக சிந்திக்க வேண்டும் போலிருந்தது.
அவன் என்னவன். நினைவுகளை மறந்தால் என்ன? என் காதலால் அவனை தன்னிடம் மீண்டும் மீட்டு விட முடியாதா என்ன? என்கின்ற மனநிலை தான்.
ஒரு தெளிவான மனதுடன் உள்ளே வந்தவளுக்கு ஏனோ மனம் சற்றே சமன் பட்டிருக்க, அப்போது தான் அவனது அறையை விழிகளால் வருடிய படி சுற்றிலும் பார்த்தாள்.
அறை முழுதும் ஆடம்பரத்திற்கு பஞ்சம் இல்லாது இருந்தாலும் அவளின் மனதைக் கவர்ந்தது என்னவோ அவளுக்கு நேரெதிரே கட்டிலிற்கு அருகில் இருந்த சுவரில் இருந்த அவளவனின் ஆளுயரப் புகைப்படம் தான்.
என்ன ஒரு ஆளுமை.
ஒரு ஆணின் கண்கள் இத்தனை காந்தமா ஈர்த்திழுக்குமா? என்று இக்கணம் கேட்டால் ‘ஆம்’ என்று தான் சொல்வாள்.
அவ் ஆளை அசரடிக்கும் தோற்றத்தில் சித்தம் தொலைத்து மெல்ல சுவரை நோக்கி நடந்தாள்.
அவளின் பார்வை மொத்தமும் அவன் விழிகளை நோக்கி இருக்க, சுவரையும் நெருங்கி விட்டவளுக்கு அவ் விழிகளை வருடி பார்த்திட ஆசையும் அக் கணம் முகிழ்த்த மறுநொடி அவளின் முகமோ வாடிப் போனது.
கூடவே எரிச்சலாக வந்தது.
“அச்சோ ஜிது பேபி உங்களை யார் ஃபுல் சுவரையே பிடிக்கிற போல இவ்ளோ பெரிய ஃபோட்டோ ஃப்ரேம் பண்ண சொன்னது? என வாய் விட்டே முனகியவள் ஒரு பெரு மூச்சுடன் இடையில் கரம் வைத்து அண்ணாந்து பார்த்தாள்.
” கொஞ்சமாச்சும் சைஸ் குறைச்சு இருக்கலாம்” என்று இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு அவனின் விழிகளை வருடி பார்க்க வேண்டும் என்ற பேரவா அதிகரித்துக் கொண்டே செல்ல,
” ஆபத்துக்கு பாவம் இல்லை” என தோள்களை குலுக்கிக் கொண்டவள் கட்டிலில் ஏறியே விட்டாள்.
இத்தனைக்கும் கடந்த இரு நாட்களாக அவள் அவனது கட்டிலை உபயோகிக்கவும் இல்லை.
மனதில் கலக்கம் இருக்க அறையில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் தான் உறங்கினாள்.
கட்டிலில் பாதம் வைத்து ஏறியதும் தான் முகத்தை சுருக்கியவள் “அச்சோ முதல் தடவை இப்படி தான் கால் வைப்பியா?” என தனக்குத் தானே கேள்வியை கேட்டுக் கொண்டே அப்படியே கட்டிலில் அமர்ந்தவள் பார்வை அவனது தலையணையில் படிய,
மெலிதாக புன்னகைத்துக் கொண்டே தலையணையை கரம் கொண்டு எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டவளோ அதனில் முகம் புதைத்து அவனது ஆண்மை வாசத்தை நுகர முயன்றாள்.
ஆனால், அவள் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்த அவனது பிரத்தியேக வாசம் இல்லாது போக, “என்னை தான் மறந்தீங்க அட்லீஸ்ட் பெர்ஃப்யூம் சேஞ்ச் பண்ணாம இருந்திருக்கலாம் ஜிதன்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவள் தலையணையை மேலும் இறுக அணைத்து விழிகளை மூடிக் கொண்டவளுக்கு சட்டென ஞாபகம் வந்தவாய் விருட்டென எழுந்தாள்.
எழுந்த வேகத்தில் ஒரு கணம் சமநிலை தவற, பிடிமானம் ஏதுமின்றி சுவரில் கரம் வைத்து ஆள் உயர புகைப்படத்தின் விளிம்பினை அழுத்தமாக பற்றிப் பிடித்து தன்னை நிதானித்து நின்றவளுக்கு இதயத்தின் ஓசை வெளியே பலமடங்காக கேட்டது.
சற்று தவறி இருந்தால் தான் தலை கீழாக வீழ்ந்து தலை சிதறி இருப்பது திண்ணம் என்ற நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைய, இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டவளுக்கு உள்ளங்கை தொடங்கி உள்ளங்கால் வரை வியர்த்து விட்டிருந்தது.
மெல்ல கரத்தை புகைப்படத்திலிருந்து எடுத்தவள் அப்போது தான் மேலே பார்த்தாள்.
அவள் பிடித்த வேகத்தில் சட்டமிடப்பட்டிருந்த படம் ஒரு பக்கமாக சரிந்திருக்க, எம்பி அதனை நேர் படுத்த முயன்ற கணம், “ஹேய் நீ என் ரூம்ல என்ன பண்ற?” என்ற கர்ஜனை குரல் அவளின் அருகாமையில் ஒலிக்க,
சட்டென கேட்ட குரலில் உடல் தூக்கி வாரிப் போட, பதட்டத்தில் பட்டென்று கரத்தினை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவளோ திரும்பி அவனை பார்க்கவும் அவனது ஆளுயரப் புகைப்படம் கீழே வீழ்ந்து உடையவும் சரியாக இருந்தது.
அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்க, அவனுக்கோ உள்ளே எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்த சீற்றம் கட்டுக் கட்டுக்கடங்காமல் பெருகியது.
வருடங்கள் கடந்து தன்னிடம் நேரடியாக பேசுகின்றான். அவளால் முழுதாக மகிழ முடியாத நிலையில் வைத்திருக்கும் கடவுளை சபித்தாள்.
மெல்ல திரும்பி ஆங்காங்கே விரிசலிட்டி சிதறிய துண்டுகளாக கிடந்த அவனது புகைப்படத்தை பார்த்தவளுக்கு நெஞ்சே அடைத்து விட்ட உணர்வு.
சற்றும் யோசிக்காமல் கீழே இறங்கியவள் குனிந்து புகைப்படத்தை தொட முயன்ற கணம், அவனோ அவளது கரத்தை அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி இழுத்திருக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனது மார்பிலேயே வந்து மோதியிருந்தாள் பாவை.
ஒரு வித எரிச்சலுடன் அவளை விலக்கி தள்ளி நிறுத்தியவனோ “யாரை கேட்டு என் ரூம்குள்ள வந்த?” என்று சீறியவனை கண்ணீர் நிறைந்த விழிகளால் ஏறிட்டு பார்த்தவள் “அ… அ…அத்தை தான்” என இதழ்கள் நடுங்க சொன்னவள் அவனது தீப் பார்வையில் மேனியில் நடுக்கம் பரவுவதை அவளால் உணர முடிந்தது.
அவளோ, “நா…நான்… உங்க போட்டோ…” என்று புகைப்படத்தை சுட்டிக் காட்டியபடி என்னவோ சொல்ல முயன்றவளை ” ஷட் அப் இடியட்” என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜித்திருந்தான் அவன்.
இதழ் கடித்து விழிகளை இறுக மூடித் திறந்தவளுக்கு உள்ளே படபடப்பாக இருந்தது.
” இதோட கோஸ்ட் என்ன தெரியுமா? என உச்சகட்ட சினத்தில் சீறியவன் இட்ஸ் த்ரீ ஹண்ட்ரெட் கோர்” என்றதும் அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, அவளை ஓர் ஏளனப் பார்வையுடன் அழுத்தமாக பார்த்தவன் “அது சரி உன்ன போல லோ கிளாஸ்கு வேல்யூ தெரியுமா என்ன? என்றானே பார்க்கலாம்.
அவளோ, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
என்ன வார்த்தை சொல்லி விட்டான்?
என்னவன் இப்படியும் பேசுவானா?
தொண்டை அடைத்தது.
” என் போட்டோவை டச் பண்ணாமல் கிளாஸஸ் எல்லாம் இப்போவே இம்மீடிட்லி க்ளியர் பண்ணு” என்று கர்ஜிக்க,
அவளுக்கோ இதழ்களில் விரக்திப் புன்னகை.
என்ன முயன்றும் அவனது கடினமான வார்த்தைகளில் அவளால் அழுகையை கட்டுபடுத்தவே முடியவில்லை.
விழிகளிலிருந்து கண்ணீரோ பொலபொலவென வழிந்தது.
” ப்ச்ச.. என்று சலித்த படி இரிடேடிங் இடியட்” என்றான் எரிச்சலாக,
முட்டாளா? ஆம் அவன் விடயத்தில் தான் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகின்றேன் என மனதில் விரக்தியாக எண்ணிக் கொண்டவளுக்கு தலை வேறு விண் விண்ணென்று தெறித்தது.
அவனுக்கோ அதோடு அவளை விட்டு விடும் எண்ணம் இல்லை போலும், ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே “அண்ட் ஒன்மோர் திங் இனிமேல் நீ என் ரூம் ல இருக்க கூடாது ஸ்டே அவே ஃப்ரம் மீ” என்றவனோ அவளின் கசங்கிய முகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே கட்டிலில் விரித்திருந்த வெண்ணிற விரிப்பை உருவி எடுத்து அவள் முகத்தில் விட்டெரிந்து ” பெர்ன் இட்” என்று விட்டு விறுவிறுவென குளியலறைக்குள் நுழைந்து கதவினை அறைந்து
சாத்தினான்.
நெஞ்சம் அதிர எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே மெல்ல குனிந்து கீழே வீழ்ந்து கிடந்த வெண்ணிற விரிப்பை தன் நடுங்கும் கரங்களால் எடுத்தவளுக்கு தன்னை முற்றிலுமாக வெறுப்பவன் எதற்காக எரித்து விடு சொன்னான் என புரியாமல் இருக்குமா என்ன?
இதழ்கள் கீழ் நோக்கி வளைய, பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாது சத்தம் வராது உடல் குலுங்க வாயை இறுக மூடி அழுது தீர்த்தாள்.
மனம் முழுதும் ரணமாக வலித்தது.
சிதறி துகள் துகளாக கிடந்த கண்ணாடி சிதறல்களை போலவே அவன் தன் மீது வைத்த காதலும் சிதறி போய்விட்டதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாள் பாவை.
விழிகளில் கண்ணீர் வழிய வழிய புறங்கையால் துடைத்துக் கொண்டே மெல்ல நகர்ந்து சிதறிய கண்ணாடி துகள்களை வேக வேகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
