Menu

இதயம் – 3

இதயம் – 3

தன் இடையில் கையை வைத்துக் கொண்டு ‘ஊப்’ என இதழ் குவித்து ஊதியவன் ஒற்றைக் கையால் நெற்றியை நீவிக் கொண்டே அவளின் முகத்தருகே நெருங்கியவன் “என்ன இது?” என அவளின் கையில் இருக்கும் அலைபேசியில் ஓடும் காணொளியைப் பார்த்துக் கேட்க…

 

அவனின் தோரணையில் அந்த இடத்தில் யார் இருந்து இருந்தாலும் நடுங்கி தான் இருப்பார்கள்.

ஆனால், ஆதிராவோ கொஞ்சமும் அசராமல் “வீடியோ” என்றாளே பார்க்கலாம்.

 

ஒற்றைப் புருவத்தை உயர்த்தி “ஓஹோ…. சரிங்க மேடம் இதுதான் வீடியோவா? சரி தான்” என நக்கலாக சொன்னவன் அவள் சுதாரிக்கும் முன் அவளின் கையிலிருந்து அலைபேசியை பறித்து எடுத்து இருந்தான்.

 

“என் ஃபோன்” என்று அவள் கத்த… “ ‘உஷ்ஷ்’ என ஒற்றை விரலை வாயில் வைத்தவன் மாமியார் வீட்டுல வந்து வாங்கிட்டு போங்க” என்றவன் திரும்பி நடக்க…

 

“ஹவ் டேர் யூ” என மீண்டும் கத்தியவளை அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள் என்றால் அவன் மட்டுமே அவளைச் சாவதானமாகத் திரும்பிப் பார்த்து அவளின் அலைபேசியை காற்றில் அசைத்தபடி இதழ்களைப் பிதுக்கிக் கொண்டான்.

 

“பப்ளிக் ரூல்ஸ்ஸை மீறி ரோட்ல ரவுடிசம் பண்றீங்கனு கமிஷனர் வரை போவேன்” என்றாள் திமிராக…

 

“ஓஹோ இஸ் இட் ? தாராளமா கம்பளைன் பண்ணிக்கலாம் ஐ டோண்ட் மைண்ட்” என்றவன் வேக எட்டுக்களுடன் தனது ஜீப்பில் ஏறி மின்னல் வேகத்தில் ஜீப்பை கிளப்பிய மறு நொடி, சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர அனைத்து வாகனங்களும் வரிசையாக செல்ல ஆரம்பித்தன.

 

“ஷிட்” என்று பல்லைக் கடித்தவள் நேராகச் சென்றது என்னவோ காவல் நிலையத்திற்கு தான்.

காவலாளிகள் இருவர் வெளியில் நின்று இருக்க, அவளுக்கு வந்த கோபத்தில் அதை எல்லாம் பொருட்படுத்திக் கொள்ளும் நிலையிலேயே அவள் இருக்கவில்லை.

விறு விறுவென உள்ளே வந்தவள் பின்னால் உள்ளே ஓடி வந்த இரு காவலர்களும் “சார் திட்டுவார் மேம் நில்லுங்க. முதல்ல எதுக்கா வந்து இருக்கீங்க?” என்று ஒரு காவலர் கேட்க…

“சார் திட்டுவார்” என்றதில் மேலும் எழுந்த கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டே “உங்க சார் எங்க?” என்று தன் விழிகளை சுற்றிலும் சுழல விட்ட படி அவள் கேட்க…

 

பக்கவாட்டில் நின்று கேஸ் ஃபைல் ஒன்றைப் பார்த்து விட்டு வந்த நரேனோ, அவள் கேட்ட தோரணையிலேயே அவள் ஷர்வீத்திற்கு வேண்டபட்டவளாகத் தான் இருப்பாள் என ஊகித்தவன் “சார் வெளில போய் இருக்கார் இப்போ வந்துடுவார்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஆளை அசத்தும் அழகனாக ஆளுமையுடன் உள்ளே வந்தவனிடன் அனைவரும் சல்யூட் அடிக்க, அவனோ ஒரு தலை அசைப்புடன் அவனை உறுத்து விழித்த படி பார்த்துக் கொண்டு இருந்தவளை கூலர்சை இறக்கி விட்டு பார்த்தவன் “நரேன்” என்று அழைத்து இருந்தான்.

 

“சார்” என்றபடி தன் அருகில் வந்து நின்றவனிடம் “என்ன மேன் நிறுத்தி வச்சு பேசிட்டு இருக்க? என்னனு கேட்டு எஃப் ஐ ஆர் போட்டுட்டு அனுப்பி விடு” என்றவன் அவளை யார் என்றே தெரியாதது போல கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் செல்ல, அவளோ,“யூ ஸ்கௌண்டர்” என்று போகும் அவனது முதுகை வெறித்து சத்தமாக கத்த, ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அவளை அதிர்ந்து போய்ப் பார்த்து இருந்தனர்.

 

அதற்கு மேலும் அங்கு நிற்காமல் விறுவிறுவென வெளியில் வந்தாள்.

அவளால் அவனது செயலைக் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.

“ஷிட்” என்றபடி ஸ்கூட்டியை ஓங்கி மிதித்தவள் முன்னால் வந்து நின்ற நரேனோ “சார் உங்ககிட்ட கொடுக்க சொன்னார்” என்று அவளது அலைபேசியை நீட்டி இருந்தான்.

 

சட்டென அதனைப் பறித்து எடுத்தவள் அவனிடம் மரியாதைக்கு நன்றி என்று கூடப் பதிலுக்கு சொல்லாமல் ஸ்கூட்டியை கிளப்பியவள் கண்டது அவசர அவசரமாக ஜீப்பில் ஏறிய ஷர்வீத்தை தான்.

 

“யார் உயிரை வாங்க கிளம்புறானோ தெரியல” என்று முணுமுணுத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சென்றவளைத் தான் இமைக்காமல் பார்த்து இருந்தான் நரேன்.

 

சற்று நேரத்தில் வெளியில் வந்த கான்ஸ்டபிள் ராஜேந்திரன் “சார் நீங்க ஸ்பாட்க்கு போகலையா?” என்று கேட்க…

 

“ஸ்பாட் ஆஹ் என்னாச்சு?” என்று அவன் கேட்க…

 

“சார்க்கு இப்போ ஒரு கால் வந்துச்சு” என்று சொன்னவர் அனைத்தையும் சொல்ல, “ஓகே நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க” என்றவனின் அலைபேசி சிணுங்க, சட்டென அழைப்பினை ஏற்றவன் முகம் சடுதியில் மாறிப் போக… அப்படியே பேசிக் கொண்டே தனது பைக்கில் கிளம்பி இருந்தான்.

 

வந்த அன்றே மர்மமான முறையில் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்து இருக்க, வந்த அன்றேவா என்ற எரிச்சலில் நெற்றியை நீவிக் கொண்டே ஜீப்பில் அமர்ந்து இருந்தான் ஷர்வீத்.

 

அரை மணி நேரத்தில் கடற்கரையில் ஜீப்பினை நிறுத்திய சாரதியோ, “சார்” என்று அழைக்க…

 

சட்டென ஏதோ நினைவில் உழன்றுக் கொண்டு இருந்தவன் வெளியில் வெறித்தான். அங்கோ, ஜன நெரிசலாக இருந்தது.

 

“ஷிட்…” என்று சொல்லிக் கொண்டே வேகமாக ஜீப்பிலிருந்து இறங்கியவனோ சம்பவ இடத்தை நோக்கி விரைந்து இருந்தான்.

 

போலீஸ் ஜீப் வந்ததும் ஜனமோ வழி விட்டு நிற்க…

 

கூலர்சை கழட்டிய படி சுற்றுப் புறத்தை தன் விழிகளால் ஆராய்ந்தவன் பார்வையோ முற்றிலும் எரிக்கப்பட்டு கிடந்த சடலத்தில் படிந்தது.

 

கிளவுஸைப் போட்டுக் கொண்டே அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்துக் கிடந்த அச் சடலத்தை நெருங்கியவன் “யார் இன்பார்ம் பண்ணது?” என்ற அவனின் ஆளுமையான குரலில் அவனின் அருகில் வந்து நின்று இருந்தான் ஒரு ஆடவன்.

 

அச் சடலத்திலிருந்து பார்வையை அகற்றாமலேயே “எப்போ பார்த்த?” என்ற அவனின் முதல் கேள்வியில் “மார்னிங் டென் தர்ட்டி இருக்கும் சார்” என்றான்.

 

“தென் நீ மட்டுமா பார்த்த?” என்ற கேள்வியில் அவனோ, “இல்ல சார் அப்பாவும் கூட இருந்தார்” என்றான்.

 

“சோ டென் தர்ட்டி ஆகுற வரையும் வேற யாரும் டெட் பாடியை காணல ரைட்?” என்றவனின் தொணியே சுற்றி உள்ளவர்களைப் பீதி அடையச் செய்து இருந்தது.

 

இப்போதைய சமூகமே தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பவர்கள் அல்லவா இதில் அனைவரும் கூடும் பொதுவான இடத்தில் அதுவும் சென்னையில் உள்ள கடற்கரையில் வெட்ட வெளியில் எரிந்த பிணம் கிடப்பது யாருக்கும் தெரியாமலா போகும்?

 

அனைவரையும் ஓர் அனல் பார்வை பார்த்தவன் “நான் சொல்ற வரை யாரும் இங்க இருந்து நகரக் கூடாது” என கர்ஜித்தவன் அடுத்த நொடியே அவர்களை அவ் இடத்திலேயே வைத்து விசாரணை செய்ய ஏற்பாடு செய்து இருந்தான்.

 

எரிந்து கிடந்த சடலத்தின் அருகே சென்று தன் விழிகளால் ஆராய்ந்தான்.

 

கைகள் இரண்டும் பின்னோக்கி இருக்க… சட்டென அவனது பார்வையோ சடலத்தின் முகத்தில் படிந்தது.

 

பார்த்த மாத்திரத்திலேயே எதையோ ஊகித்துக் கொண்டவன் அடுத்ததாகத் தடவியல் ஆய்வாளர்களை வரவழைத்து இருந்தான்.

 

அவர்கள் வந்ததும் சுற்றுப் புறத்தை ஆராய்ந்துக் கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றவன் ஏதேச்சையாகக் கீழே பார்த்தான். அவன் நின்ற இடத்திலிருந்து பிரதான வீதி வரை மணலில் கொஞ்சமும் தடம் மாறாமல் அப்படியே இருந்த வாகனச் சில்லின் தடங்களைக் கண்டவன் புருவம் மேலேறி இறங்க, அப்படியே குனிந்து அலைபேசியில் அதனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் பார்வையோ சம்பவ இடத்திற்கு நேர் எதிரே தூணில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் படிந்தது.

 

தூரத்தில் அனைவரையும் விசாரணை செய்துக் கொண்டு இருந்த நரேனை அழைத்தவன் “இந்த சிசிடிவி புட்டேஜ்ஜை செக் பண்ணனும் அரேஞ்ச் பண்ணு அண்ட் பப்ளிக் அஹ் க்ளியர் பண்ணிடு” என்றவன் நின்ற இடத்திலிருந்து ஒரு இன்ச் கூட நகராமல் விழிகளை மூடி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.

 

இங்கோ, எரிச்சலாக வீட்டின் உள் வந்த ஆதிராவை வியப்பாகப் பார்த்த அவளது அன்னை பூர்ணிமா “ஈவ்னிங் தானே உன்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸ மீட் பண்ணிட்டு வரேன்னு சொன்ன என்னடி இப்படி பேய் அறைஞ்ச போல வந்து இருக்க?” என்று கேட்டவர் அவளின் கோபத்திற்கு மேலும் தூபம் போட்டு விட….

 

அவ்வளவு தான்… அவ்வளவே தான்.

 

கொதித்து விட்டாள் அவள்.

 

“இல்லையா பின்ன பேய் தான். பேயே தான் என்று கத்தியவள் அதுவும் சாதா பேய் இல்ல காக்கி சட்டை போட்ட பொறுக்கி பேய்” என்றதும் ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே “என்னடி ஷர்வீத்கிட்ட வம்பு இழுத்தியா?” என்று நேரடியாக அவர் கேட்டு வைக்க…

 

“ஐயோ… இல்லைங்க உங்க பாசமலர் தம்பிகிட்ட நான் போய் வம்பு இழுப்பேனா? அவர் எங்க? நான் எங்க?” என்று நக்கலாக உரைத்தாலும் அவளின் பேச்சின் தொணியில் கழன்ற கோபத்தைக் கண்டு கொண்ட பூர்ணிமா “இன்னைக்கு தானே ஊர்ல இருந்து வந்து டியூட்டில ஜாயின் பண்ணி இருக்கான் அதுக்குள்ள என்னடி சண்டை இழுத்து வச்ச?” என்றவர் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியேற முயல, “அம்மா” என்ற அவளின் அழைப்பு அவரின் நடையை நிறுத்தியது.

 

“சீக்கிரம் சொல்லு” என்றவரின் குரல் சற்று கடுமையாகவே ஒலித்தது.

 

“அதான் உங்க அருமை தொம்பி சிக்னல்ல பண்ணுன அலப்பறைகளை நான் கம்பிளைன் பண்றேன் அண்டர் த பப்ளிக் நியூசன்ஸ் கீழ கேஸ் ஃபைல் பண்ணுங்க”என்றாளே பார்க்கலாம்.

 

“ஹேய்… அவன் போலீஸ் டி” என எச்சரித்தார் பூர்ணிமா.

 

“ஐ டோண்ட் மைண்ட் நீங்க டிஜிபி தானே ஆக்ஷன் எடுக்கலாம் தப்பில்ல” என்று பதிலுக்கு அவள் வாதிட…

 

“கிரிமினல்லை பிடிக்க அவன் பண்ணது தப்பில்ல ஆதிரா. இதுக்கு மேல பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன் அவனை பொறுக்கின்னு திட்டுறதை விட்டுட்டு ஒழுங்காக மாமானு கூப்பிடு” என்றவர் தனது வண்டியில் ஏறிச் சென்று இருந்தார்.

 

“ஷிட்… கடைசி வரையும் அவனுக்கு தான் சப்போர்ட்ல என்று சத்தமாக கத்தியவள் யாருக்கு யார் மாமா? பொறுக்கி” என்று திட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்றி இருந்தாள் பெண்ணவள்.

 

👁️ 481 Views
5 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.