Menu

நொடி – 30

நொடி – 30

மெது மெதுவாக விழிகளை மலர்த்தி தன் முன்னே ஒட்டுமொத்த காதலையும் விழிகளில் தேக்கி தன்னையே ஊடுருவுவதை போல பார்த்திருந்தவனை தான் வெறித்திருந்தாள்.

 

உணர்வுகள் அனைத்தும் மரித்த நிலையிலும், அவனது கரத்துக்குள் அகப்பட்டிருந்த தனது கரத்தை சட்டென உருவிக் கொண்டாள் பெண்ணவள்.

 

அதிலேயே அவனது முகம் வாடிப் போயிற்று!

 

அவளிடம் எதை எதையோ பேசி விட எண்ணியவைகள் யாவும் அவளின் அர்த்தமற்ற பொருளில்லா பார்வை வீச்சில் தொண்டைக்குள்ளேயே வர மறுத்து சிக்கிக் கொண்டன.

 

அவளோ, அவனது ஒட்டு மொத்த தவிப்புக்களுக்கும் ஈடு கட்டும் முகமாக அவனது கரத்திலிருந்து உருவிய தனது கரத்தை, அவனது முகத்தை நோக்கி மெல்ல உயர்த்தி முக வடிவை விரல்களால் அளந்த படியே “ஜிதன்” என்றிருந்தாள்.

 

அவளது ஸ்பரிசம் தன்னை தீண்டியதும் இதழ் பிரித்து புன்னகையுடன் ஆர்வமாக அவளை பார்த்திருந்தவன் அவள் உதிர்த்த பெயரில்,

 

அவ்வளவு தான். அவனது சப்த நாடிகளும் அடங்கியே விட்டன.

 

அவனுக்கோ, இதோ விழவா என விழிகளில் திரண்டு நின்ற கண்ணீர் அவளது கரத்தின் மேலேயே பட்டுத் தெறித்தது.

 

இப்போது அவள் இருக்கும் நிலையில் தன் உணர்வுகள் வெடித்து சிதறி விடுமோ? என அதீதத்திற்கும் அஞ்சி போனான்.

 

” எல்லாருமா சேர்ந்து என் … என் ஜிதனை கொன்னுட்டிங்கல…..” என இதழ்கள் நடுங்க கேட்டவள் கரம் தொப்பென கீழே சரிய,

 

அக் கேள்வியில் துடித்து நிமிர்ந்தவன் ‘ நா எதுவும் பண்ணல டி’ என உள்ளே ஊமையாகக் கதறினான்.

 

மேலும் , அவளது மேனி அழுகையால் குழுங்கவும் தன்னை நிதானித்துக் கொண்டவன் ” ஹேய் அழாத யாழ். ப்ளீஸ் ” என்று சொல்லிக் கொண்டே அவளது கண்ணீரை துடைத்து விட்டவனின் கரத்தை வெடுக்கென தட்டி விட்டவள் ” டோண்ட் டச் மீ” என்று உச்சஸ்தாயில் சீறினாள்.

 

அவளுக்கோ , உச்சகட்ட சினத்தின் விளைவால் மார்புக்கூடோ ஏறி இறங்கியது .

 

அதில் அவனுக்கோ உள்ளே சுறுசுறுவென ஆத்திரம் எழுந்தது. ஆனால் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை . அவளின் நிலையை உணர்ந்து தன்னை முயன்று அடக்கிக் கொண்டு ” சாரி மா” என்று விட்டு அறைக் கதவை திறந்து கொண்டு விருட்டென வெளியேறியிருந்தான்.

 

இவ்வளவு நாட்களாக அவளிடம் இறுகிய பாறை போல முகத்தை வைத்துக் கொண்டு ஒழுங்காக பேசாதவன், இன்று கண்ணீர் முகத்துடன் அவள் முன் நின்றும் அவளின் மனதில் பதிய மறுத்தது தான் அவனது துரதிஷ்டம்.

 

அவன் சென்று விட்டான் என்று கூட உணர முடியாதளவில் அவளது மேனியும் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக இறுகியது.

 

எப்படியான ஏமாற்றத்தை சந்தித்து விட்டாள்?

 

தான் அனைத்துமாக நம்பிய நண்பி முதல் தன்னை ஈன்றெடுத்த அன்னை வரை தனக்கு எப்பேட்பட்ட துரோகத்தை இழைத்துள்ளனர் என்று எண்ண எண்ண மனதிலோ உச்சத்திற்கும் அழுத்தம் ஏறிக் கொண்டே சென்றது .

 

தான் மும்பை வந்திறங்கிய கணத்திலிருந்து நடந்த அனைத்தையும் தனக்குள் மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்த்துக் கொண்டவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் புத்திக்கு உரைப்பதை போலவே இருந்தது.

 

அதுவும் தன் அன்னையின் தடுமாற்றமான பேச்சும் தன்னைக் கண்டதும் ஒரு விதமாக மாறும் பதட்டமான அவரது முகமும் சடுதியில் மின்னி மறைந்தது. இதில் ஷீலா என்றொரு நண்பி வேறு…

 

ஆக, தன்னை கரம் பிடித்த வேற்று ஆடவனும் அடிக்கடி தன் மனம் காயப்படுவதை போலவே தன்னிடமே எதுவும் அறியாதவனைப் போலவே நடந்து கொண்டுள்ளான் என்றால் அவன் யார்? ஏன் அப்படி நடந்து கொள்ள வேண்டும்? அதுவும் என் ஜிதனை போல் ஒருவன்! என மனதில் அணிவகுத்து நின்ற கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விடை அறிய விளைந்தது அவளின் உள்ளம்.

 

மாறாக அவளுக்கோ உருவமில்லா பந்தொன்று திரண்டு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதை போல இருந்தது.

 

தன்னவனின் அருகாமை, தன்னவனின் ஸ்பரிசம் கூட தெரியாத அளவுக்கா எவனோ ஒருவனுடன் ஒரே அறையில் அதுவும் அவனது இதழ் முத்தங்களுக்கும் தொடுக்கைகளுக்கெல்லாம் மயக்கத்துடன் தன்னை மறந்து நின்றேன்?

 

அவள் மேனி கூசிற்று!

 

தான் உயிருக்குயிராக நேசித்தவனது முகம், இன்னொருவனுக்கு அமைந்து விட்டால் அவன் கட்டிய கணவனே ஆயினும், அவன் தன் நேசத்திற்கு உரியவன் ஆகிவிட முடியுமா என்ன?

 

என்னவோ தன்னவனுக்கு துரோகம் இழைத்து விட்ட உணர்வு. என்ன முயன்றும் முடியாமல் அவ்வுணர்வின் வீரியம் தாழாது தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் கதறி அழுதாள் பெண்.

 

அதே சமயம் அவளது அறைக்குள் நுழைந்த தலைமை வைத்தியரோ, அவளின் நிலை கண்டு அதிர்ந்து போனார். அவளின் கேவல் அதிகரிக்க அதிகரிக்க இதயத்துடிப்பின் வேகத்திலும் இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்தது.

 

இதற்குள், அவள் இருக்கும் சிகிச்சை பிரிவுக்குள் அனைவரும் பதற்றமாக ஓடுவதை கண்டவன் பதறி போனான்.

 

“யாழ்… என்ற படியே எவ்வித அனுமதியும் இன்றி அவசர சிகிச்சை பிரிவுக்குள் வேகமாக நுழைந்தவன் அவளின் பித்து பிடித்த போன்றதொரு நிலையைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான்.

 

வெறி பிடித்தவள் போல கத்தி கதறியவளின் அருகே செல்ல கூட திராணி அற்றவனாய் நின்றவனை பார்த்த செவிலிய பெண்ணோ, “சார் வெளில நில்லுங்க பிளீஸ்…” என்று இயலாமையுடன் கெஞ்ச,

 

அவனுக்கோ அவரின் கெஞ்சல்கள் எல்லாம் காதில் விழவே இல்லை.

 

கால்கள் நிலத்தில் வேரூன்ற அவளையே வெறித்து நின்றிருந்தான்.

 

கரத்தில் ஏறிய மருத்துவ குழாய்களை ஆவேசமாக இழுத்து தரையில் எறிந்தவள் “ டாக்டர்… ப்ளீஸ் எல்லாரையும் வெளில போக சொல்லுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்…” என்று அழுத்தம் தாழாது அடிக் குரலில் சீறினாள்.

 

“ நர்ஸ் அவரை அழைச்சிட்டு வெளில போங்க” என்ற மருத்துவர் அவளின் நாடியை பிடித்து பரிசோதிக்க ஆரம்பித்து விட,

அவனோ, “ ஐ காண்ட் டாக்டர் . ஐ வாண்ட் டு ஸ்பீக் வித் ஹேர் ரைட் நவ்.”

“ என்ன விளையாடுறிங்களா மிஸ்டர். உங்க வைஃப் பீபி ஹை லெவல் ல இருக்கு. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்களை யார் என் பெர்மிஷன் இல்லாம பேஷண்ட் ரூம்குள்ள அலோ பண்ணது?” என்ற மருத்துவரின் பார்வை அறைக்குள் நின்ற செவிலிய பெண் மீது கண்டமாக படிந்தது.

அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தன் எதிரே நின்றுகொண்டு ‘யார் நீ? என்னை எதிர்த்து கேள்வி கேட்பது?’ என்ற ஆணவத்தின் உச்சத்தில் எகிறிக் கொண்டு செல்லும் அவனுக்கு சினம் தான் வந்து இருக்க வேண்டும் மாறாக அவனது இதழ்களோ வழக்கத்துக்கு எதிராக மன்னிப்பை யாசித்துக் கொண்டே இருந்தது.

“சாரி டாக்டர் . பட் அவகூட பேசணும்….” என்றவனின் வார்த்தைகள் விசும்பிய படி தன்னை வெறித்தவள் மேல் படிந்ததும்,

அவனுக்கோ, மீண்டும் மேலும் பேச வந்த வார்த்தைகள் யாவும் வர மறுத்து தொண்டைக் குழிக்குள்ளேயே கொண்டன.

ஆனால், தலைமை மருத்துவரோ கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அவனது கோரிக்கையை அடியோடு நிராகரித்தார்.

“ நர்ஸ் இவரை வெளில அனுப்புங்க ” என்ற வைத்தியர் மருத்துவ குழாய்களை சரி செய்ய ஆரம்பித்து விட,

இதே நேரம் அவள் என்ன நினைத்தாளோ எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே தனது உடைந்த குரலை சரி செய்த படி “ டாக்டர் … அ…..அவர் கூட பேசணும் ப்ளீஸ் அல்லோ மீ ” என வார்த்தைகளை முயன்று கோர்த்தவளின் மனம் என்னவோ படபடவென அடித்துக் கொண்டே இருந்தது.

“தாராளமா பேசலாம் மா பட் உங்களோட ஹெல்த் வீக்கா இருக்கு சோ ப்ளீஸ் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று நிதானமாக சொன்ன தலைமை மருத்துவரோ பக்கவாட்டாக திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “ஷீ அக்செப்டெட் டு டாக் வித் யூ. பட் ரிமம்பர், ஆல்ரெடி ஷீ இஸ் எமோஷனலி வீக் சோ டோன்ட் ஆர்க்யூ வித் ஹர்” என்றார் அழுத்தம் திருத்தமாக …

“தேங்க்ஸ் டாக்டர்” என்றவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவர் அவசர பிரிவை விட்டு செவிலிய பெண்ணுடன் வெளியேறி இருக்க, அங்கே எஞ்சி இருந்தது என்னவோ அவனும் அவளும் மட்டும் தான்.

அவளோ, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவனை ஏறிட்டவள், “ஹ்ம்ம்… நாட் பேட் அப்படியே என் ஜிதன் போல இருக்கீங்க என குரலில் ஒருவித அழுத்தத்துடன் கூறியவள் வேற என்னலாம் என்கிட்ட ஃபேமிலியா சேர்ந்து மறைச்சி டிராமா பண்ணீங்க? என்று என்னவோ கூற வந்தவள் சலிப்பாக நெற்றியை நீவிக் கொண்டே அவனை உறுத்து விழித்த படி, “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க பேர் என்ன?” என்று கேட்டவளிடம்,

அவனோ, விழிகளை ஒரு கணம் இறுக மூடித் திறந்து அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “அபராஜிதன்” என்றிருந்தான் கணீர் குரலில்,

அவளுக்கோ முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

பெயரில் கூட என்னவன் பெயரா? யார் இவன்? ஒருவேளை ஜிதனையே நினைத்துக் கொண்டு இருப்பதால் தனக்கு தான் தவறாக கேட்டு விட்டதோ என்னவோ! என மனதில் நினைத்து கொண்டு மீண்டும்,

” என்ன பேர் சொன்னிங்க?” என அதிர்ச்சி விலகாமல் மீண்டும் அவனிடம் கேள்வி தொடுத்தவளின் பரிதவிப்பு அவனை உயிரோடு வதைத்தாலும் தன் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே “அபராஜிதன்” என்றான்.

👁️ 837 Views
5 11 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.