Menu

நொடி – 28

மும்பை, இரவு 10மணி 17 நிமிடங்களை தொட்டு இருக்க,

கோரமாக மிரட்டும் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளின் போர்வைக்குள் மறைந்திருந்த சாலையில் வண்டியை அதி வேகமாக செலுத்திக் கொண்டு இருந்தான் ஆணவன்.

ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பற்றியிருந்த அவனது கரங்களோ அவனது கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கிக் கொண்டு இருந்தன.

‘ யாழ்…..பேபிடால்… உனக்காக வந்துட்டு இருக்கேன் மா… ‘ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே வந்தவன் இதயம் என்னவோ தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.

நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை அவனது கழுத்தினூடாக திண்ணிய மார்பில் வழிந்தோட மிதமிஞ்சிய பதட்டத்துடன் வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டு இருந்தவன், ஒரு மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்திற்கு கிட்டத்தட்ட அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தான்.


அப் பிரம்மாண்ட வீட்டின் போர்டிகோவில் காரை, அதி வேகத்துடன் வந்து கிறீச்சிட்டு நிறுத்தியவன், காரின் கதவைத் திறந்து கொண்டு புயலென வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

“யாழ் …. யாழ்…. யாழ்ழ்ழ்ழ்….” என்று சத்தமாக அழைத்துக் கொண்டே வரவேற்பறையிலேயே இருந்த அறைகளுக்குள் தேடித் தேடி சோர்ந்து போனான்.

இத்தனைக்கும் வரவேற்பறையிலேயே அவனை வெறித்த படி அமர்ந்திருந்த, அவனது அன்னை கூட அவனின் கருத்தில் பதியவே இல்லை.


புத்தி பேதலித்தவன் போல வீட்டில் இல்லாத ஒருவளைத் தேடிக் கொண்டிருக்கும் அவனையே வைத்தக் கண் வாங்காமல் வெறித்தவருக்கு மனமே ஆற மறுத்தது.

அவனோ, இறுதியாக சமையலைக்குள் சென்று பார்த்து விட்டு விறுவிறுவென மாடிப்படிகளில் ஏறினான்.

கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி மேசையில் வைத்த ஷீலா, ” அவ வீட்ல இல்ல” என்றார் அழுத்தம் திருத்தமாக….


அவர் கூறிய விடயத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டவனுக்கு உடல் விறைத்து இறுகியது.

அப்படியென்றால் அவன் இன்னும் அவளை அழைத்துக் கொண்டு வரவில்லையா? ஒருவேளை தன்னைத் திசை திருப்ப அவன் பொய் ஏதும் உரைத்திருப்பானோ? என்ற எண்ணம் இப்போது வந்து தொலைக்க, அவனை இப்போதே கொன்று புதைக்கும் ஆத்திரம் அசுர வேகத்தில் எழுந்தது.


அவன் தாமதிக்கவில்லை. மீண்டும் கீழே வந்து தன் அன்னையிடம் கூட கதைக்கும் எண்ணம் அரவே அற்று வீட்டை விட்டு வெளியேற முனைந்தவனை மீண்டும் தடுத்தது ஷீலாவின் குரல்.

“எங்க போற?” என்றார் உணர்வற்ற குரலில்,

அன்னையின் கேள்வியில் எரிச்சல் மீதூற சட்டென்று திரும்பினான். ” ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்றவன் விழிகளில் சிவப்பேரியது.

அவரோ, அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டு எழுந்து அவனை உறுத்து விழித்துக் கொண்டே நெருங்கினார்.

அன்னையின் விழிகளும் கலங்கி சிவந்திருப்பதைக் கண்டவனுக்கு உள்ளே என்னவோ செய்தது.

அவன் முன்னே வந்து நின்று மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டே ” அவளை விட்டுரு இனியாச்சும் அவ நிம்மதியா இருக்கட்டும்” என்றார் நிதானமாக,

“முடியாது. அவ எனக்கு வேணும். ஷீ இஸ் மைன்” என்றான் ஆத்திரமாக,


“ஓஹோ… மைன்’ னா….? இப்போ தான் தெரியுதா?” என குரலில் கேலி இழையோட அவர் கேட்ட தொனியில், அவனுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறக்கத் தொடங்கியது.

“மா… உங்க யூஸ்லஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல ஐ ஹேவ் நோ டைம்” என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துத் துப்பியவனோ வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான்.


” என்னடா பண்ணி வச்சிருக்க இன்னொரு பொண்ணை கிஸ் பண்ணி இருக்க அதுவும் உன் பொண்டாட்டி முன்னாடியே உனக்கு கொஞ்சம் கூட உறுத்தலயா?…. அய்யோயோ…. அவ பாவம் டா…எப்படியெல்லாம் துடிச்சிருப்பா? அய்யோ கடவுளேளே….” என்று கதறித் தவித்து அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து விட்டார் ஷீலா.

அதுவரை அவனுள் கனன்றுக் கொண்டிருந்த ஆத்திரம் அனைத்தும் மறைந்து அன்னையின் கதறலில் ஸ்தம்பித்து திரும்பினான்.

திரும்பியவன், அன்னையின் நிலைக் கண்டு நிலையில்லாமல் தவித்து போனான்.

ஒரு புறம் அவனின் சரிபாதி. மறுபுறம் அவனை ஈன்றெடுத்தவள் என முற்றிலுமாக மாறி மாறி அவனின் சிந்தனையை சிதைத்துக் கொண்டிருந்தனர்.

தன் அன்னையின் கண்ணீரை அவனால் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.

எத்தனையோ முறை எதற்கெல்லாமோ அவனிடம் மன்றாடி இருக்கின்றார். ஆனால் இப்போது அவரின் முற்றிலும் உடைந்த நிலை அவனை அசைத்துப் பார்த்திருந்தது.

மற்றொரு பெண்ணைத் அணைத்து நின்ற அந்த நொடி, என்னவளுக்கு  எவ்வளவு பெரிய காயத்தைக் கொடுத்திருக்கும் என்பதை நினைக்க நினைக்க அவனுக்கே மூச்சு முட்டுவது போல் இருக்க, அதை பற்றி எண்ணவே அஞ்சினான் அவன்.

சட்டென விரைந்து தன் அன்னையின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவரின் கண்ணீரை நடுங்கும் கரங்களால் துடைத்து விட்டவன் ” மாஹ் ப்ளீஸ் அழாதீங்க” என்றான் இறைஞ்சலாக,

பட்டென்று அவனின் கரங்களைத் தட்டி விட்டு ” எப்போ இருந்து இப்படி இரக்கமே இல்லாத அரக்கனா மாறின டா… என் கண்ணீருக்கு கொடுக்குற மதிப்பை ஏன் அவ கண்ணீருக்கு கொடுக்கல… என்று ஆதங்கமாக கேட்டவர் ஒரு விரக்தி புன்னகையுடன் அது சரி… என்ன இருந்தாலும் அவ உன்கிட்ட தானே வந்தாகணும் அப்படிங்கிற ஆணவத்துல தானே இவ்வளவும் பண்ற… என்றவர் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே நான் தப்பு பண்ணிட்டேன் டா … பெரிய தப்பு பண்ணிட்டேன்…”  என்று பிதற்றிக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு அழுதார் ஷீலா.

” மாஹ் அப்படி இல்ல மா அவ என்…” என்று சொல்லவந்தவனை,

” இல்ல அப்படி சொல்லாத அவளோட காதலுக்கு நீ கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன்” என்ற அவரது வார்த்தைகளில் உயிர் துடித்து நிமிர்ந்தான்.

தன்னை ஈன்று எடுத்த அன்னையே என்ன வார்த்தை சொல்லி விட்டார்?

நொடியில் என்னன்னாவோ நினைவுகள் மனதில் வந்து அலை மோதின.

” என்ன பார்க்குற அவ… அவளோட ஜிதன்…” என்று ஷீலா ஆரம்பித்து விட,

அடுத்து அவர் என்ன சொல்ல வருகின்றார் என ஊகித்தவனுக்கு தான்அவர் கூற வரும் வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தால் உயிரோடு இருக்கும் போதே நெஞ்சைப் பிளந்து இதயத்தை உருவி எடுக்கும் வலியை அல்லவா கொடுக்கும்.

அழுத்தம் தாளாது, “மா போதும் நிறுத்துங்க… நானா அவளை எனக்கு மேரேஜ் பண்ணி வைக்க சொன்னேன்? என்று ஆதங்கமாக கேட்டவன் அவ என்னை லவ் பண்ணல… என்னை மட்டுமே விரும்பாத அவளை எனக்கு மேரேஜ் பண்ணி வச்சது நீங்க…” என்று ஆக்ரோஷமாக சீறிக் கொண்டே எழுந்தவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை வெறி வந்ததோ!

வரவேற்பு அறையிலேயே  அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த நிலை கண்ணாடியில் தெரிந்த தன் பிரதிபிம்பத்தை வெறித்தான்.

அவளின் உயிரான காதல் நீயில்லை என்று சம்மட்டியால் தலையில் அடித்ததை போல அவனது பிரதி பிம்பமே உணர்த்திற்று!

அனைத்தையும் போட்டு உடைக்கும் ஆத்திரம் எழ, பக்கவாட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடியை விசிறி அடித்து கண்ணாடியை நொறுக்கியிருந்தான்.

அதுவோ சில்லு சில்லாக சிதறி நாலாபுறமும் தெறிக்க, அவனுக்கோ அப்போதும் அவனின் ஆத்திரம் தீர்ந்த பாடில்லை.

தனது இயலாமை, அழுத்தம் என அனைத்தும் ஒன்றிணைந்து நொடியில் அவனை ஓர் மூர்க்கனாகவே மாற்றிவிட்டிருக்க, “ஜிதன்ன்ன்…”  என குரல் உயர்த்திய ஷீலாவை திரும்பி அழுத்தமாகப் பார்த்தவன் விழிகளில் அனல் கொப்பளித்தது.

” பயமா இருக்குடா ஏன் இப்படி நடந்துக்குற?

” எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்” என்றான் சீறலாக,

அவரோ, அவனை அதிர்ந்து பார்க்க,

” ஏன் மா எதுக்கு இந்த முகத்தை எனக்கு… ” என்று தன் முகத்தை சுட்டி காட்டியவன் அதற்கு மேல் பேச முடியாது தோய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தான்.

அன்னையல்லவா! தான் ஈன்றெடுத்த மகன் இந்தளவுக்கு உடைந்து போவான் என அவரே எதிர் பார்க்கவில்லை.

சற்று முன் தன்னை எரித்து விடுவது போல பார்த்தவன் இவன் தான் என்று அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத நிலையில் அவனது தோற்றம் இருந்தது.

அவரோ தாங்க மாட்டாமல் மெல்ல எழுந்து அவனை நெருங்கினார்.


விழிகளை இறுக மூடி தலையைப் பற்றிக் கொண்டு தனக்குள் உழன்ற படி அமர்ந்திருந்தவனின் தலையை தன் மார்போடு அழுத்தி பிடித்துக் கொண்டார்.

அவனோ, அடுத்த நிமிடமே அவரின் இடையை இறுக பற்றி வயிற்றில் முகம் புதைத்தான்.

அவனது உடல் குலுங்கியது.

அழுகின்றானா?

அதிர்ந்து போனார் அவர்.

இவ்வளவு நேரமும் அவன்மேல் கனன்றுக் கொண்டிருந்த அளவற்ற சினம் எங்கே போனது என்று அவருக்கே தெரியவில்லை.

“அழதப்பா… இசை வந்துடுவா…” என்றார் குரல் தழுதழுக்க,

“வலிக்குது மா… நானும் அவளை நெருங்க நினைக்கிறேன் பட் அடுத்த செகண்ட் அவ லவ் பண்றது உன்ன இல்லடானு பீல் வரும் அப்போ நொறுங்கி போயிடுவேன் மாஹ்… வார்த்தைக்கு வார்த்தை ஜி.. ஜிதன்… ஜிதன்னு செத்துபோனவன் பெயரை சொல்லி என்னை கூப்டுறா மா அப்படியே அவளை உலுக்கி நான் ஜிதன் இல்லடினு கத்த தோணும் பட் என்னால அதை எப்படி சொல்ல முடியும்? இட் ஹர்ட்ஸ் மீ லாட் மாஹ்” என்றான் தவிப்பாக….

” கண்ணா… அழாதடா எல்லாம் சரியாகிடும்.. நாம எல்லா உண்மையையும் அவளுக்கு எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா” என்றார்.

அவனிடம் ஒரு விரக்தி புன்னகை.

“புரிஞ்சிபாளா? நோ வே மா… அவ உயிருக்குயிறா காதலிக்கிறது இந்த முகத்துக்கு சொந்தக்காரனை, என்னை இல்லை” என்றவனுக்கு அதை சொல்லும் போதே குரல் கரகரத்தது.

” இல்லடா அவ நான் சொன்னா புரிஞ்சிப்பா”என்று ஷீலா அவனின் கேசத்தை கோதிய படி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பின்னால்  என்னவோ வீழ்ந்து உடையும் பலத்த சத்தம் கேட்டது.

இருவரும் ஒருங்கே பின்னால் திரும்பி பார்க்க, அங்கோ அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் நிலைக் குத்திய பார்வையுடன் விழிகள் இரண்டும் இரத்தமென சிவக்க நின்று கொண்டிருந்தாள் யாழிசை.

சற்று முன் அவளிடம் அனைத்தும் கூறிவிடலாம் என்று கூறிய ஷீலாவுக்கே அவளைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.

அப்படியென்றால் அவன் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?

அவளின் நிலைக்குத்திய பார்வையே சொல்லிற்று அவள் அனைத்தையும் கேட்டு விட்டாள் என்று!

அவளின்  அசையா தோற்றம்  கண்டு துடித்து போனான்.

அவளை நெருங்கி காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என கரங்கள் பரபரத்தன. ஆனால் அவளை நெருங்கவே அஞ்சி நின்றான் அவன்.

அவனது பார்வை அவளை வருடியதென்றால், அவளின் பார்வையோ அவனை மொத்தமாக அளந்துக் கொண்டிருந்தது.


சுவாசிக்க கூட மறந்தவளாய் நின்றவளின் விழிகளில் இருந்து நில்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, மாறாக கண்ணீரை மறைத்த அவளது பார்வை என்னவோ தன் எதிரே நின்றவனில் தான் குவிந்திருந்தது.

நான் ஊனும் உயிருமாக காதலித்தவன், தன்னை ஸ்பரிசித்து தாலி கட்டிய கணவன் இவன் இல்லை என்றால் என்னவன்?

அவளின் நெற்றி சுருங்கியது.
சட்டென நினைவடுக்கில் சற்று முன் அவன் விட்ட வார்த்தைகள்  வந்து போயின.

‘வார்த்தைக்கு வார்த்தை ஜி.. ஜிதன்… ஜிதன்னு செத்துபோனவன் பெயரை சொல்லி என்னை கூப்டுறா மா அப்படியே அவளை உலுக்கி நான் ஜிதன் இல்லடினு கத்த தோணும் பட் என்னால அதை எப்படி சொல்ல முடியும்?’

மீண்டும் மீண்டும் அசரீரியாய் அச்சரம் பிசகாமல் ஒவ்வொரு சொற்களும் மனதின் அடியாழத்தை சென்று தாக்க, சுள்ளென்ற வலி இதயத்தினூடாக ஊடுருவி மேனியை வியர்க்க வைத்தது பெண்ணவளுக்கு,

“ஜிதன்… ஜிதன் என்னை விட்டு போயிட்டாரா?” அவளது இதழ்கள் மெல்லத் துடித்தன. குரல் அவளது தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டது.

அவளையே ஆழ்ந்து ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு தன்னவளின் இதழ்கள் முணுமுணுத்த வார்த்தைகளை மட்டும் உணராமலா போவான்?

அதிலேயே உயிரோடு மரித்து போனான் அவன். உயிரையே உறிஞ்சிக் குடிக்கும் இந்த வலியை விட உயிரை மாய்த்துக் கொள்வது மேல் என அவனது எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்க,

இதே சமயம் அவளின் வதனமோ தாள முடியா வலியில் கசங்க, இடது மார்பை அழுந்த பற்றி பிடித்த படி  பின்னோக்கி நகர்ந்தாள் . அவளுக்கோ, கொஞ்சம் கொஞ்சமாக சுவாசம் திணற ஆரம்பிக்க, அப்படியே மயங்கி தரையில் சரிந்திருந்தாள் பெண்ணவள்.

 

👁️ 911 Views
4.9 17 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.